மதுரை:

டாஸ்மாக் தொடர்பான வழக்கில், கடந்த  2016ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில்  மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை  அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதன்காரணமாக மது விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க கோரியும் பொது நல வழக்கு மதுரை உயர்நீதி மன்றம் கிளையில்  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்றைய விசாரணையின்போது, மது விற்பனை மட்டும் தான் அரசுக்கு வருமானமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க முடியுமா என அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.

இன்று மீண்டும் டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கிருபாகரன், அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரினார்.

2016-ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளன என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  ஒரு தலைமுறையே சீரழிந்தாலும் கூட, மது விற்பனை மட்டும் தான் அரசுக்கு வருமானமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2016ம் அண்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும், உடடினயாக தமிழகத்தில்  முதல்கட்டமாக 500 கடைகள் மூட உத்தரவிட்ட நிலையில் படிப்படியாக கடைகள் குறைக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.