நெட்டிசன்:

சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும்.அதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம் .

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டி ருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை

எல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள்.

“தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”

”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர்

என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான்என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.

பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார்.

சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.

இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்

–    ராமேஸ்வரன்