சாமானியர்களிடமிருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி: ஏடிஎம் பரிமாற்ற கட்டணம் மற்றும் ஆண்டு பராமரிப்பு கட்டணமாக, கடந்த நிதியாண்டில் மட்டும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.268 கோடியை வசூலித்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி என்ற தகவல் வெளியாகியள்ளது.

நீரவ் மோடி என்ற நபர், இந்த வங்கியிலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டி ஏப்பம் விட்டுவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பி ஓடி, அங்கு சொகுசாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாமானியர்களின் பணம் வசூலிக்கப்பட்டது குறித்த இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பஞ்சாப் நேஷனல் வங்கியிடம், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் பராமரிப்புக் கட்டணம் உள்ளிட்ட பல தகவல்களை, மத்திய பிரதேச மாநிலத்தின் சந்திரசேகர் கவுர் என்பவர் கேட்டிருந்தார்.

இதனையடுத்து, இவ்வங்கி, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.268 கோடியை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதில், ரூ.152.88 கோடி டெபிட் கார்டுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணமாகவும், ரூ.115.21 கோடி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணமாகவும் பெறப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.