சர்கார் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

மிகுந்த எதிர்பார்ப்புடன்  இன்று வெளியான சர்கார் திரைப்படம்  இன்று காலை உலகம் முழுதும் வெளியாகி உள்ளது.

திரைப்படப் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே சர்ச்சைகள் கிளம்பின. குறிப்பாக இப்படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடமிருந்து திருடிவிட்டார் என்று வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் தெரிவித்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். ஆரம்பத்தில் இதை மறுத்த பட இயக்குநர் முருகதாஸ் பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே தாங்கள் சமாதானமாகிவிட்டதாக தெரிவித்தார்.

இந்த  சர்ச்சையாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

வழக்கம் போல திரையரங்குகளில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாக விற்கப்பட்டது. இது குறித்து விஜய் ரசிகர்கள் சிலரே மனம் வெதும்பி சமூகவலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டினர்.

தஞ்சை ராணி பேரடைஸ் திரையரங்க நிர்வாகம், “முதல் இரு நாட்கள் மிக அதிக விலைக்கு கட்டணத்தை அதிகரிக்கச் சொன்னார்கள். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்” என்றதோடு தங்கள் திரையரங்கில் படத்தை வெளியிடவும் மறுத்துவிட்டது.

இதையெல்லாம் மீறி தமிழகம் முழுதம் சர்கார் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். முன்பதிவுக்காக நேற்று ரசிகர்கள் முட்டி மோதியதில் சில இடங்களில் காவல்துறை தடியடி நடத்தி கும்பலை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது.

இத்தனை பரபரப்புக்கிடையே இன்று காலை சர்கார் வெளியானது.

மிகுந்த ஆர்வத்துடன் திரையரங்கத்துக்குள் சென்ற ரசிகர்களில் பெரும்பாலோர் நிறைவான முகத்துடன் வெளியே வரவில்லை.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

“என்னதான் சினிமா என்றாலும்.. அதுவும் விஜய் என்றாலும்.. குறைந்தபட் லாஜிக்காவது வேண்டாமா? பலம் வாய்ந்த அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜய் சிலருடன் சென்று அக்கட்சித் தலைவர்களை மேடையிலேயே மிரட்டுவது, அடித்து உதைப்பது எல்லாம் கொஞ்சம்கூட நம்பும்படியாக இல்லையே..

பாடல்கள் எதுவும் ரசிக்கவைக்கும்படி இல்லை..” என்று பலவாறாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சர்கார் படத்தை பார்த்த பலர் ட்விட்டர் இணையதளத்திலும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளான இன்று எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என்பது குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுவதாவது:

“திரையரங்கத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக ரூ.1500 வரை சில இடங்களில் வசூலிக்கப்பட்டது. இதனால் தமழகத்தைப் பொறுத்தவரை சுமார் 15 கோடி ரூபாய் இன்று வசூலாகியிருக்கும். ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்திருந்தால் இதில் பாதி கூட தேறாது.

இன்றைய வசூலைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் திருப்தி அடைந்திருப்பார்கள். ஆனால் நாளை முதல் என்ன நிலவரம் என்பது அவர்களுக்கு கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்து ரசிகர்களிடையே  ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களிலும் இது பகிரப்படுகிறது. ஆகவே இன்று ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நாளை இருக்குமா என்பது சந்தேகமே.

இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களைப் பொறுத்தவரை, ஏழு நாட்களாவது முழுக்காட்சியாக அரங்கு நிறைந்தால்தான் வாங்கிய விலையைக்கான தொகையை எடுக்க முடியும். அது நடக்குமா என்பதுதான் கேள்வி!” என்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில்.