சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, சசிகலா சொத்து வாங்கியது எப்படி என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் கைதியாக தற்போது பெங்களூரு சிறையில் இருக்கிறார் சசிகலா. பணமதிப்பு நடவடிக்கையில் போது 500, 1,000 ரூபாய் தாள்களை மாற்றி ஏராளமான சொத்துகளை வாங்கினார் என்றும், எப்படி வாங்கினார் என்றும் வருமான வரித்துறை சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

அதில் இடம்பெற்றுள்ள விவரங்களை தி இந்து ஆங்கில நாளிதழ் விரிவாக சொல்லி இருக்கிறது. யார், யாரிடம் எவ்வளவு சொத்துகள் எவ்வளவு வாங்கப்பட்டன, எப்போது வாங்கப்பட்டன என்பது போன்ற முழு விவரங்கள் அதில் இடம்பெற்று இருக்கிறது.

மொத்தம் 1674.50 கோடிக்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. அனைத்தும் அசையா சொத்துகள் ஆகும். இவை எல்லாம் 2016ம் ஆண்டு நவ.8 முதல் டிசம்பர் 30க்குள் வாங்கப்பட்டவையாகும்.

வருமான வரித்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம். முதலில் தொழிலதிபர் நவின் பாலாஜி என்பவரிடம் இருந்து சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி லஷ்மி ஜூவல்லரி நிறுவனத்துடன் தொடர்புடைய கம்பெனியின் இயக்குநர் அவர்.

அவருக்கு புதுச்சேரியில் ரிசார்ட் ஒன்றும் இருக்கிறது. 2016ம் ஆண்டு தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், நகை வியாபாரத்தை மட்டும் கவனித்துக் கொள்ளலாம், மற்ற சொத்துகளை விற்றுவிடலாம் என்று எண்ணி இருக்கின்றனர்.

அதற்காக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உதவியாளர் குமார் என்பவரை அணுகி இருக்கிறார். உதவியும் கேட்டு இருக்கிறார். அவர் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் என்பரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு 168 கோடிக்கு சொத்துகள் விற்கப்பட்டு இருக்கின்றன. 148 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி இந்த பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த பணம் அனைத்தும் 3 மினி வேன்களில் இரவு 10.30 மணி அளவில் கொண்டு வரப்பட்டு வியாபாரம் முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. சொத்தை விற்று தந்ததற்காக அமைச்சர் சம்பத்துக்கு 12 கோடி கமிஷனும் தரப்பட்டு இருக்கிறது. அப்போது கூட அதில் 75 லட்சம் பணம் எண்ணும் போது குறைவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதன்பிறகு, 135.25 கோடியை நாங்கள் கொண்டு வந்துவிட்டோம் என்று வருமானவரித்துறையிடம் விரிவாக கூறியிருக்கிறார் நவின். பின்னர் அந்த பணம் முழுவதையும் தொழில் அபிவிருத்திக்காக பல வங்கிகளிலும், உறவினர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைத்து இருக்கிறார்.

இதேபோன்று ராமகிருஷ்ண ரெட்டி என்பவரிடம் இருந்து சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளன. 115 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டு சொத்துகள் வாங்கப்பட்டிருக்கின்றன.

அதில் 10 கோடி புரோக்கர்களுக்கு செல்ல, 105 கோடி மட்டும் ரெட்டிக்கு சென்றிருக்கிறது. தமது கணக்கில் 6 கோடியையும், 7 உறவினர்களின் கணக்குகளில் மற்ற பணத்தையும் வரவு வைத்திருக்கிறார்.

ஆனால் ஆரம்பத்தில் பழைய நோட்டுகளை வாங்க மறுத்த ரெட்டி, பின்னர் தமது நிறுவனத்தையும், ஊழியர்களின் நிலைமையையும் மனதில் வைத்து அவற்றை பெற சம்மதித்து இருக்கிறார்.

சிவாங் படேல் என்பவரிடம் இருந்தும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. குடும்ப சொத்தான தூத்துக்குடியில் உள்ள 137 ஏக்கர் நிலத்தை 200 கோடிக்கு விற்றிருக்கிறார். அதற்கு முழு உறுதுணையாக இருந்தது சசிகலா வழக்கறிஞர் செந்தில்.

அதேபோல தேனியில் 1,897 ஏக்கர் கொண்ட எஸ்டேட் (மதிப்பு 100 கோடி), 60 கோடி மதிப்புள்ள 16.6 ஏக்கர் நிலம் (இது எண்ணூரில்), 450 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் சர்க்கரை ஆலை ஆகிய சொத்துகளை சசிகலா வாங்கி இருக்கிறார்.

கோவையில் உள்ள காகித ஆலையும் பழைய ரூபாய் நோட்டுகள் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. ஆறுமுகசாமி என்பவரின் காகித ஆலை 600 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. அதில் 400 கோடி பழைய நோட்டுகள்.

இந்த பணம் அனைத்தும் 400 பெட்டிகளில் (தலா ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு கோடி) வைக்கப்பட்டு கொடநாடு மேனேஜர் நடராஜன் மூலம் வினியோகிக்க பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள ஸ்பெக்ட்ரம் வணிக நிறுவனமும் அதன் உரிமையாளர் செந்தில் குமார் என்பவரிடம் இருந்து 120 கோடிக்கு வாங்கப்பட்டு உள்ளது.

இந்த சொத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி இருப்பது விவேக் ஜெயராமன். பேச்சுவார்த்தை முடிவில் 192.5 கோடி முடிவாகி அதில் 130 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் தரப்பட்டு உள்ளன.

மதுரை கேகே நகரில் உள்ள மிலன் வணிக வளாகமும் பழைய ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டே வாங்கப்பட்டு இருக்கிறது. அமர் லால்ஜி வோரா என்பவரிடம் இருந்து அவை வாங்கப்பட்டு இருக்கின்றன.

மிகபெரிய அரசியல்வாதி தான் இதுபோன்ற சொத்துகளை வாங்க முடியும் என்பதாக அவரிடம் உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் கூறி இருக்கிறார். அதன் பிறகு தான் செந்தில் வழியாக அறிமுமாகி 57 கோடிக்கு பெற ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதற்காக 30 கோடி முன்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.