“அட்ஜஸ்ட்மெண்ட்டுகளை தவிர்ப்பது எப்படி?: நடிகை அர்த்தனா பேட்டி

‘தொண்டன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அர்த்தனா, தொடர்ந்து “செம’ படத்தின் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.  அவருடன் ஒரு பேட்டி..

“அர்த்தனாவுக்கு திரைப்படத்துறையில் ஆசை ஏற்பட்டது எப்படி?” 

“எங்க சொந்த ஊர் திருவனந்தபுறம். நான் பிறந்த வளர்ந்தது, படிச்சது எல்லாமே அங்கதான். வீட்டுல அப்பா, அம்மா இரண்டு பேருக்குமே நான்தான் செல்லம்.

சின்ன வயசிலிருந்தே எனக்கு நடிப்பு மேல ரொம்ப ஈடுபாடு உண்டு. பள்ளிக்கூடத்துல  படிக்கும்போதே நாடகம், கலை நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் கலந்துக்குவேன். தவிர பள்ளி முடிச்ச கையோட, டி.வி.யில் தொகுப்பாளரா ஆயிட்டேன்.

அதோட நடிப்பு ஈடுபாடு காரணமா, காலேஜ்ல விஸ்காம் படிச்சேன். அதை முடிச்சதும் ஒரு மலையாளப் படத்துல சுரேஷ் கோபி சாரோட கசினுக்கு ஜோடியா நடிச்சேன்.   அதற்குப் பிறகு ஒரு தெலுங்கு படத்தில் நடிச்சேன். பிறகுதான்  சமுத்திரக்கனி சார் மூலமா ‘தொண்டன்’ படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுது.

நீங்க நடிச்ச படத்துல ஸ்பெஷல் எது..?

 நான் நடிச்ச எல்லா படங்களுமே ஸ்பெஷல்தான்.   இப்ப தமிழ்ல மூணு படங்கள் நடிச்சுட்டேன்.  

ஒவ்வொரு விதத்தில எல்லாமே  ஸ்பெஷல்தான். நான் தமிழ்ல தான் மூணு படம் பண்ணிருக்கேன். மத்த மொழில ஒரு படம்தான் பண்ணிருக்கேன். தமிழ்ல தான் தொடர்ந்து நடிக்க விரும்பறேன்.”

செம’ படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது…?” 

“செம’ படம் பத்தி சொல்லணும்ன்னா, ஏகப்பட்ட  விசயங்கள் கத்துக்கிட்டேன். தவிர அந்தப் படத்தோட படப்பிடிப்பு நடந்த இடம் அருமையா இருந்தது. அதுல ஹீரோவா நடிச்ச  ஜி.வி.பிரகாஷ் வெரி குட் பர்சன். எந்தவித பந்தாவும் இல்லாத எளிமையான மனிதர். ஜோவியலா பழகுவாரு. நடிக்கிறதுக்கு  எனகரேஜ் செய்தார்.

‘செம’ படம் என்ன நிறைய இடத்துக்கு கொண்டு போய் சேர்த்தது. அந்தப்  படம்  மூலமாமாத்தான்  ‘கடைக்குட்டி சிங்கம். பட வாய்ப்பு கிடைச்சுது!”

“கடைக்குட்டிச் சிங்கம் படத்துல எந்தமாதிரி கேரக்டர் உங்களுக்கு?” 

“அந்தப் படத்தோட படப்பிடிப்பு முழுதும் முடிஞ்சிடிச்சு. அதில மூணு ஹிரோயின்ஸ். அதுல நானும் ஒருத்தி.

இந்த படம் முழுக்க கிராமத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கு.  கிராமத்துல வாழற ஒரு குடும்பத்துல நடக்கிற பிரச்சினைகள்.. அதற்கு ஏற்படுற தீர்வுகள்தான் கதை.

நீண்ட நாளைக்குப் பிறகு குடும்ப பிரச்சனைகள பேசுற படமா, குடும்பத்தோடு பாக்குற படமா உருவாகியிருக்கு.

இயக்குநர் பாண்டிராஜ் சாரோட ‘பசங்க’ திரைப்படம் போல ஒரு எமோசனல் டிராவல் இந்தப் படத்துல இருக்கும்.  படத்துல நான் கிராமத்து பெண்ணா வர்றேன்.  இப்போதைக்கு இது மட்டும் தான் சொல்ல முடியும்.

படம் வெளியானவுடனே  இன்னும் நிறைய சொல்றேன்.” 

படத்தில் மூன்று நாயகிகள்ல ஒருத்தரா நடிக்கிறீங்க.. மூன்று பேருக்குள் ஈகோ மோதல் இருந்ததா?”

“நான் எப்பவுமே ஈகோவுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்.  யார் என்ன சொன்னாலும்  நம்ம வேலையை நாம சரியா பண்ணிட்டா எந்தப் பிரச்சனையும் இல்ல. தவிர நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நல்ல நடிகைன்னு பேர் எடுக்கணும். அதுதான் என் லட்சியம். மத்தபடி யார்கூடவும் போட்டி போட விருப்பம் இல்லை. ஸோ.. எந்தவித முட்டல் மோதலும் இல்லாம மூணு பேருமே ப்ரண்ட்லியா பழகினோம்.”

“இந்த கேரக்டர்ல நடிக்கணும் என்று லட்சியம் ஏதும் இருக்கிறதா?”

“சமுதாய அக்கறை உள்ள கருத்துக்களை பத்தி பேசற படத்துல நடிக்கணும்னு விருப்பம் இருக்கு. அதே போல பிரபலத்தோட வாழ்க்கை வரலாறு படத்துல நடிக்கணும். ம்… ஹிஸ்டாரிகல் படத்துல நடிக்கணும். அதே போல மன நலம் பத்தி நிறைய பேசுற அத சரியா அணுகுற ஒரு படத்தில நடிக்கணும் என்று ஆர்வம் இருக்கு.

“திரைத்துறையில் இருக்கும் அட்ஜஸ்மெண்ட் குறித்து நிறைய நடிகைகள் தற்போது பேசுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?” 

“எந்தவொரு விசயமும்  வெளிப்படையா பேசப்படுவது நல்லதுதான். அப்போதான் ஒரு தீர்வு கிடைக்கும்.

அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது திரைத்துறையில் மட்டுமில்லை..  எல்லாத் துறையிலும் இருக்கிறது. பட்… எனக்கு இதுவரை இந்த மாதிரி அந்த மாதிரி அனுபவம் நடந்தது கிடையாது. அதற்காக இது சினிமாவில் கிடையாதுன்னு நான் சொல்லல.  

ம்… வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடந்த பெண்கள் வெளியில வரும்போது இந்த மாதிரி நடத்தான் செய்யும். ஏன்னா, ஆண்கள் எல்லோரும் நல்லவங்கன்னு சொல்ல முடியாதே..!

இது போல நடந்தா பெண்கள் எச்சரிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படணும். ஏன்னா உங்கள் சம்மதம் இல்லாமல் உங்கள யாரும் எதுவும் செய்துட முடியாது.

என்கிட்ட யாராவது இப்படி நடந்துக்க முயற்சி செய்தா, எப்படி ‘நோ’ சொல்றதுன்னு  எனக்குத் தெரியும். மறுக்க தெரிஞ்சா  போதும். இதைத் தவிர்க்கலாம். ஆமாம்.. பெண்கள் ‘நோ’ சொல்ல கத்துக்கணும். மனம் கலங்கக்கூடாது. இதையெல்லாம் கடந்துதான்  பெண்கள் முன்னேற வேண்டியிருக்கு.” 

“இதுவரை ஹோம்லியாகவே  நடித்திருக்கிறீர்கள். கவர்ச்சி வேடம் என்றால் மறுத்துவிடுகிறீர்களோ..”

“அப்படியில்லை… எனக்கே ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிப்பது போரடிக்கிறது.   மாடர்ன் ரொல்கள் செய்யத்தான் எனக்கும் விருப்பம்.

மற்றபடி கவர்ச்சி என்பது பார்ப்பவரின் பார்வையில் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை  எனக்கு ஏற்ற உடைகள் அணிந்து நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.!”

கார்ட்டூன் கேலரி