நீதிமன்ற தீர்ப்புகளில் “கற்பழிப்பு’:   தடுப்பது எப்படி?: சொல்கிறார் உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சந்துரு

“கற்பழிப்பு என்கிற  வார்த்தையே தவறு. அதாவது, கற்பு என்கிற கற்பிதத்தை பெண்கள் மீது சுமத்தும் போக்கு இது.  கற்பு என்பதே கற்பிதம் என்கிறபோது கற்பழிப்பு என்கிற வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்? அதற்கு பதிலாக பாலியல் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம், வல்லுறவு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமே” என்கிறார்கள் முற்போக்காளர்கள்.

மேலும், “பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வார்த்தைகளுக்குப் பதிலாக மாற்றுத்திறனாளி, திருநங்கை என்று பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோமே” என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் பிரபல தினசரிகள்,  தொலைக்காட்சிகளில் கூட கற்பழிப்பு என்ற வார்த்தை இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஊடகத்தினர் பலரே எதிர்ப்பு தெரிவித்துவருவது ஆறுதல் அளிக்கிறது.

அதே நேரம், கற்பழிப்பு என்கிற வார்த்தை நீதிமன்ற தீர்ப்புகளிலும் இடம் பெறுகின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி. உதாரணமாக  கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு குறித்த தீர்ப்பில்  எட்டாம் பக்கம் கற்பழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது இந்த நிலையை எப்படி மாற்றுவது?

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

அவர் அளித்த பதில்:

தமிழில் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சட்ட சொல் அகராதி இன்னும் அரசால் வெளியிடப்படவில்லை. 1970களில் அதற்கான ஒரு அரசு வெளியீடு சட்டத்துறையால் கொண்டுவரப்பட்டது. அதிலும் மொழிமாற்றம் பெற்ற சொற்கள் முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்று உறுதி கூற முடியாது. இன்னும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு மத்திய / தமிழக அரசால் வெளியிடப்படவில்லை என்பது வெட்கக்கேடு.

இதனால் தங்களுக்கு மனம் போனவாறு மொழிமாற்றம் செய்யப்படுவதுடன் அதில் பாலினப் பிரச்சினைகளிலுள்ள வேறுபாடுகளை உணர்வுப்பூர்வமாக தவிர்ப்பதில்லை.

1982ல் எம்.ஜி.ஆர் அரசு கீழமை நீதிமன்றங்களில் கட்டாயமாக தமிழ் பயன்படுத்த வேண்டுமென்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றமோ அச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிலாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் விருப்பத்திற்கேற்ப தீர்ப்புகளை ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ எழுதலாமென்று விதிவிலக்கு கொடுத்துவிட்டது. இந்த உயர்நீதிமன்றத்தின் உத்திரவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்த பின்னும் அதை ஒரு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெற்றுள்ளார். இதனால் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் எவ்வித வழிகாட்டலுமின்றி தங்களுக்கேற்ப மொழிமாற்றம் செய்து சட்ட சொற்களை தங்களது தீர்ப்பில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் கற்பழிப்பு / வன்புணர்ச்சி / பலாத்காரம் என்று ஒரே குற்றத்திற்கு பல வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மொழிமாற்ற பிரச்சினை தவிர சரியான பாலியல் புரிதல் இல்லாமையையும் காட்டுகிறது.

 

நடிகர் ராஜ்குமார் கடத்தபப்ட்ட வழக்கின் தீர்ப்பு (ஏழாம் பக்கம்)

தமிழக அரசின்  உதவியுடன் உயர்நீதிமன்ற பொறுப்பில் தீர்ப்பு திரட்டு என்ற மாத இதழ் வெளியிடப்படுகிறது. இதில் சட்ட சொற்கள் சிலவற்றிற்கு தமிழ்மொழிபெயர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட தமிழறிஞர் குழுவொன்றால் முறையாக அனுமதிக்கப்படவில்லை. எனவே அனைவராலும் பின்பற்றக்கூடிய அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட சொல் அகராதி வரும்வரை இப்பிரச்சினை தொடரத்தான் செய்யும்.

அரசமைப்பு சட்டத்தின் 348 (2) பிரிவின்படி உயர்நீதிமன்றத்திலும் தமிழை கூடுதல் வழக்கு மொழியாக கொண்டு வரும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டும் இன்னும் ஆளுநர் அதற்காக குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று அறிவிக்கை பிறப்பிக்கவில்லை. இவ்விஷயம் குறித்து உயர்நீதிமன்றத்தை தமிழக அரசு கேட்டுக் கொண்டபோது, உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளின் அமர்வு கூட்டம் தமிழில் சட்டப்பூர்வமான சொல் அகராதி வெளியிடும்படி கேட்டுக்கொண்டது. அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இப்படிப்பட்ட குறைபாடுகளைத் தவிர்ப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக மாற்றுவதற்கு ஒரு தனி அமைப்பை உருவாக்கி அதற்கான அனைத்து உள்கட்டமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றும், அப்படி செய்தாலொழிய தமிழை சிறப்பாக நீதிமன்ற மொழியாக மாற்ற முடியாது என்றும் கருத்து தெரிவித்தது.

உயர்நீதிமன்றத்தில் தமிழை கூடுதல் மொழியாக பயன்படுத்த வேண்டுமென்று போராடும் வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மனுக்களை தாக்கல் செய்வதோ (அ) தமிழில் வாதிப்பதையோ பெரும்பான்மையாக தவிர்த்து வருகிறார்கள். இதுபற்றி மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை தனது பிரதாப முதலியார் சரித்திரத்தில் 1879ம் வருடத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

தமிழ் நியாயாதிபதி முன்பாக இங்கிலீஷில் வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் இந்தத் தமிழ் நாட்டையும், தமிழ் பாஷையையும் மற்ற வக்கீல்களையும், கக்ஷிக்காரர்களையும், சகல ஜனங்களையும் மெய்யாகவே அவமானப் படுத்துகிறார்.

இந்த நாவல் வெளிவந்து 140  வருடங்கள் ஆனபின்னரும் நிலைமை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான் மத்திய அரசு கூட 3000 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட சிலையின் கீழ் ”ஒற்றுமையின் சிலை” என்ற ஆங்கிலத்  தலைப்பை ”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என்று கூகுள் மொழிபெயர்ப்பு கொலை செய்துள்ளது.

இப்படிப்பட்ட மொழிமாற்ற கொலைகளை தவிர்க்கும் வண்ணமே ,  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கு முன்னால் குடியரசுத் தலைவர் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே அவர்களது ஆங்கிலப் பெயரை இந்தி (தேவனாகரி எழுத்தில்) யில் எழுதி வாங்கிக் கொள்கின்றனர். இதன் மூலம் ஆங்கில நியமன உத்திரவிற்கும் (வாரண்ட்), இந்தி நியமன உத்திரவிற்கும் வேறுபாடில்லாமல் இருப்பது உறுதி செய்யப்படும். இல்லாவிட்டால் இவர் அவரில்லை என்று வழக்குகள் நீதிமன்றத்தின் கதவை தட்டும் வாய்ப்புகள் ஏற்படும்.”

Leave a Reply

Your email address will not be published.