பருவமழை காலம் துவங்கிவிட்டது. கிராமப்புறங்களில் வாழ்வோர் பாம்புகளின் நடமாட்டத்தை ஆங்காங்கே அடிக்கடி காணலாம். உலகளவில் அதிக பாம்புக்கடி நிகழும் நாடாக விளங்குகிறது இந்தியா.

தங்களின் வசிப்பிடங்களில் மழைகால தண்ணீர் நிரம்பி விடுவதால், பாம்புகள் வெளியே வரவேண்டிய நிலை ஏற்படுகிறது. இரை தேடுவது மற்றும் இணையோடு சேர்வது போன்ற காரணங்களும் இவற்றில் அடக்கம். அப்போதுதான் அவை, தாங்கள் விரும்பாத மனிதனையும் சந்திக்கும் துர்பாக்கிய சூழல் ஏற்படுகிறது.

பாம்புக்கடி தொடர்பாக கடந்த 2005ம் ஆண்டின் ஒரு உலகளாவிய புள்ளிவிபரத்தைக் காண்போம். இந்த ஆண்டில் உலகளவில் பாம்புக் கடிக்கு ஆளானோரின் தோராய எண்ணிக்கை 5.4 மில்லியன். அதில் இந்தியாவின் எண்ணிக்கை மட்டும் 2.8 மில்லியன். கிட்டத்தட்ட பாதிக்கும்மேல். இப்போது புரிகிறதா? இந்தியா எதற்காக பாம்புக் கடியின் தலைநகர் என அழைக்கப்படுகிறதென்று.

உலகளவில் அந்த ஆண்டில் பாம்புக் கடியில் இறந்தோரின் எண்ணிக்கை 1,00,000 என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் மட்டுமே இறந்தோரின் எண்ணிக்கை 45,900. இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்ட கணக்கைவிட 30 மடங்கு அதிகம். கள ஆய்வின் மூலம் இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதாகும்.

ஆனாலும், பாம்புக் கடியில் ஒரு ஆண்டிற்கு எத்தனை பேர் இந்தியாவில் இறக்கின்றனர் என்ற தெளிவான புள்ளி விபரம் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவில் பாம்புக் கடியால் இறந்தோரின் எண்ணிக்கை 8,554 என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் மொத்தம் 300 வகையான பாம்பினங்கள் வாழ்கின்றன. அவற்றில் 62 பாம்பினங்கள் விஷமுடையவை. அதிலும், 4 வகையான பாம்பினங்கள் அதீத விஷம் கொண்டவை.

நிபுணர்களின் ஆய்வுப்படி பாம்புகள் என்பவை காடுகள் மற்றும் கிராமப்புறங்களில் மட்டுமே வாழவில்லை. நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றன. வீடுகளின் சில இடங்கள், கழிவறைகள், தோட்டங்கள் மற்றும் எலிகள் போன்ற உயிரிகள் வாழும் சாக்கடைகள் ஆகியவை பாம்புகளுக்கான இடங்களாக உள்ளன.

இந்தியாவில் பாம்புக்கடி மரணங்கள் அதிகம் நிகழ்வதற்கான காரணங்கள்:

* கிராமப்புறங்களில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமை

* தாமதமான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல்

* மருத்துவப் பணியாளர்களுக்கு பாம்புக்கடி குறித்து போதிய அறிதலின்மை

* பாம்புக்கடிக்கு பாரம்பரிய வைத்திய முறைகளை நம்புவது மற்றும் பூசாரிகளிடம் செல்வது

* விஷ முறிவு மருந்துகள் போதிய அளவிற்கு இல்லாமை

* விஷ முறிவு மருந்துகளை முறையான வகையில் பாதுகாக்கும் வசதியின்மை

* விஷ முறிவு மருந்துகளின் அதிக விலை

பாம்புக்கடியைப் பொறுத்தவரை, அதன் விஷத்தைவிட, அதைக் குணப்படுத்துவதற்கு பின்பற்றப்படும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள்தான் மோசமானவை என்கிறார்கள் தொடர்புடையவர்கள்.

பாம்புக் கடித்தால் செய்யவேண்டியவை:

* பதற்றமடையாமல் அமைதி காத்து, உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

* பாம்புக் கடித்த இடத்தை எதுவும் செய்யாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

* ஆடைகள் இறுக்கமற்று சற்று தளர்வாக இருத்தல் வேண்டும்.

பாம்புக் கடித்தால் செய்யக்கூடாதவை:

* பாம்புக் கடித்த இடத்தை அறுத்தலோ மற்றும் வாய் வைத்து உறிஞ்சுதலோ கூடாது.

* சிகிச்சை மேற்கொள்ளாமல் மந்திரித்தல் மற்றும் பிரார்த்தனை செய்தல் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

* பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் கட்டி, ரசாயனங்கள் அல்லது சூடு வைத்தல் ஆகியவற்றை செய்தல்கூடாது.

* குருதி நாடியை துணி அல்லது கயிறு வைத்து இறுகக்கட்டுதல் கூடாது. இதனால் வீக்கம் இன்னும் அதிகமாகும்.