இந்த ஊரடங்கின் போது பலரும் தவறவிட்ட, இப்போதும் தவறவிடும் ஒரு விஷயம், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, ஏனெனில், மனிதர்களாக சமூகமயமாக்கல் என்பது நமக்கு இயல்பானது. ஆனால், முன்போல் இல்லை என்றாலும், வீடியோ கான்பரன்சிங் மட்டுமே நம்  அன்புக்குரியவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க ஒரே வழியாக உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்களின் நடமாட்டம் தொடங்கி,  பொது இடங்கள் செயல்படத் தொடங்கி இருந்தாலும், COVID-19 நோயால் பாதிக்கப்படாமல், எப்படி நண்பர்களுடன் இணைந்திருப்பது என்பதே மக்களின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி ஆகும்.

தொற்றுநோய் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் போது சமூகமயமாக்கல்
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு நாளும் வைரஸ் தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. எனவே, பாதுகாப்பிற்காக, ஆறு அடிக்கும் குறையாத சமூக விலகலைக் கடைப்பிடித்தல், வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிதல், சரியான சுகாதார பழக்கவழக்கங்களைப் பேணுதல் போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தற்போதைய சூழ்நிலையை மதிப்பீடு செய்து பார்த்தால், இயல்பு நிலைத் திரும்ப இன்னும் சில காலம் ஆகலாம் என்பது தெளிவாகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான திறனுள்ள தடுப்பு மருந்து கிடைக்கும்போது மட்டுமே இரவு நேர விருந்துகள் என வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் இணைந்திருக்க முடியும். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த பெருந்தொற்றை குணப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இதற்கு அடுத்த ஆண்டு வரை ஆகலாம். எனவே, அதுவரை நாம் எங்கு செல்வது, யாரை சந்திப்பது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீங்கள் நிச்சயமாக உங்கள் நண்பர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்கலாம் அல்லது அவர்களின் வீடுகளுக்குச் செல்லலாம், ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து காத்துக் கொள்ள புதிய சமூக விதிமுறைகளைப் பராமரிக்க மறக்காதீர்கள்.
வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள்
கடந்த 3 மாதங்களாக, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சரியான சமூக விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். ஆனால் இப்போது நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும்போது, நாம் யாரைச் சந்திக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் முன்பு செய்ததைப் போல சுதந்திரமாக நடமாட முடியாது. நீங்கள் செல்லும் இடங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் இருப்பதாகத் தெரிந்தால், அங்கு செல்வதைத் தவிர்க்கவும். இங்கே பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டவுடன் அறிந்துக் கொள்ளும் வழிகள் இல்லை என்பதால், முதியவர்கள் மற்றும் குறைவான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகும் அதிக வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
 
இது தவிர, உடல்நிலை சரியில்லை என்றால், வீட்டை விட்டு வெளியேறுவதை அறவே தவிர்க்கவும். சிறிது காலத்திற்கு, வெளியில் எதையும் சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையோ தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றத்திற்கு உள்ளாக்கி நோய்தொற்று ஏற்பட வசதி செய்துக் கொடுக்கலாம். நமது பாதுகாப்பு! நமது கடமை!!
தமிழில்: லயா