கருத்துக்கணிப்பு நிறுவனத்தில் களப்பணி ஆற்றிய மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சரவணன் சந்திரன் (  Saravanan Chandran ) அவர்களின் முகநூல் பதிவு:
4
“2001 ஆம் வருடம். அப்போதுதான் ஆறாம்திணையில் வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம். சம்பளம் போதவில்லை. எங்களுடன் கல்லூரியில் படித்த நண்பனொருவன் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தில் வேலையில் இருந்தான். என்னையும் என்னுடைய நண்பர்கள் சிலரையும் நடக்கவிருந்த அந்தத் தேர்தலுக்குக் கருத்துக் கணிப்பு வேலைக்காக அழைத்திருந்தான். ஒருநாளுக்கான சம்பளம் 150 ரூபாய். ஐம்பது பேரைச் சந்தித்து கருத்துக் கணிப்புப் படிவங்களை நிரப்பித் தரவேண்டும் என்பது விதி.
நானும் சில நண்பர்களும் முதலிரண்டு நாள்கள் ஆர்வமாக வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம். ஆண்கள் தண்ணியைப் போட்டுவிட்டு லந்து கொடுப்பார்கள். பெண்களிடம் கேள்விகளைக் கேட்டால், வெட்கத்துடன் சிரித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவிடுவார்கள். இல்லையெனில் எங்க வூட்டுக்காரரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்பார்கள். பொம்பளைககிட்ட என்னடா உங்களுக்குப் பேச்சு என ஆண்கள் சிலர் அடிக்கவும் வந்திருக்கிறார்கள். வயதானாவர்கள் வேண்டுமென்றே மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள் என்பதை அவர்கள் பொக்கை வாய்ச் சிரிப்புடன் சொல்லும் போதே உணர்ந்து கொள்ள முடியும்.

3
இரண்டு கேள்விகளை முடிப்பதற்குள் நீயே நிரப்பிக் கொள் என்பார்கள் பலர். சிலர் ஒரு பார்மை நிரப்பித் தருகிறேன் எவ்வளவு தருவ என்பார்கள். அந்த ஐம்பது படிவங்களில் குறைந்தது இருபத்தைந்தாவது பெண்களைக் கேட்டு எழுத வேண்டும். ஆனால் ஐந்து பெண்களைக் கேட்டு எழுதுவதற்குள் தாவு தீர்ந்து விடும். சொல்லி வைத்தாற் போல மக்களில் 95 சதவீதம் பேர் பொய்யாக மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார் என்று கேள்வி கேட்டதற்கு இன்னாரென்று ஒரு பதில் சொல்லியிருப்பார்கள். உங்களுக்கு யார் மேல் அதிருப்தி என்கிற கேள்வியைக் கேட்கும் போது, ஆட்சியைப் பிடிப்பவர் என்று சொன்னவர் பெயரையே திருப்பிச் சொல்லி விட்டு நக்கலாகச் சிரிப்பார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வார காலம் இந்த மேன்மக்களுடன் போராடிப் பார்த்துவிட்டு, சலித்துப் போய் ஒரு முடிவெடுத்தோம். அன்றையை சூழலில் எங்களுக்கு அந்த 150 ரூபாய் பெரியது. அதை விட்டுவிட முடியாது. நண்பர்கள் கால் போன போக்கில் நடந்து போய் டோர் நம்பர்களையும் தெருப் பெயர்களையும் குறித்துக் கொண்டு வருவார்கள்.

1

அயனாவரம் பக்கத்தில் ஒரு அருமையான பூங்கா ஒன்று இருக்கிறது. அங்கே அமர்ந்து பெயர்களையும் வீட்டு எண்களையும், பாலினங்களையும் கற்பனையாகக் குறிப்பிட்டு விட்டு, எங்கள் இஷ்டத்திற்கு ரேண்டமாக டிக் அடித்து படிவத்தை நிரப்பி முடிப்போம். ஒரு நாளைக்கு நூறு படிவங்களை ஆளொன்றிற்கு நிரப்பிக் கொண்டு போய்க் கொடுத்ததைப் பார்த்துவிட்டு, அந்த நிறுவனத்தின் மேலாளர் எக்ஸ்ட்ராவாக ஐம்பது ரூபாய் போட்டுக் கொடுத்தார்.

2

எங்களை வேலைக்கு அழைத்துப் போய் விட்ட நண்பனுக்கு மூக்கில் வேர்த்துவிட்டது. நிறை போதையில் ஒருத்தன் போட்டும் கொடுத்து விட்டான். “அதுக்கு ஏண்டா அயனாவரம் பார்க்குல போய் உட்கார்ந்து பண்ணிறீங்க. ரூம்ல இருந்தே பண்ணியிருக்கலாம்ல” என்றான் நண்பன் சோர்ந்து போய். அவன் கேட்ட கேள்விக்கு இன்னொரு நண்பன் பொறுமையாகப் பதில் சொன்னான். “மாப்பிள்ளை செய்யிற தொழில்ல ஒரு தர்மம் வேணும் பாத்துக்க. டோர் நம்பரெல்லாம் கரெக்டா எழுதணும்ல. நாளைப்பின்ன செக் பண்ணுனாங்கன்னா உனக்கு ஏதாவது பிரச்சினை வந்துரக்கூடாதுல்ல” என்றான். எங்களை வேலைக்கு அழைத்துப் போன நண்பன் உணர்ச்சிப் பெருக்கில் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

அந்த வேலை முடிகிற வரைக்கும் நாங்கள் எங்கள் செலவிலேயே அவனுக்குப் பீர் வாங்கிக் கொடுத்தோம். அந்தத் தேர்தலில் நாங்கள் விரும்பி ரேண்டமாக டிக் அடித்த கட்சிதான் ஜெயித்தது.

தொலைநோக்குப் பார்வையுடன் எப்படிச் செயல்படுவது என்பதை அந்த அயனாவரம் பூங்கா எங்களுக்கு உணர்த்தித் தந்தது!”