வதந்திகளை தடுப்பது எப்படி? : பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிவுரை

வாட்ஸ்அப் வதந்திகளைத் தடுக்க அதனை பயன்படுத்தபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நிறுவனமே சில அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.

குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக பரவும் வதந்திகளால் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டநிலையில் வதந்திகளை தடுக்குமாறு வாட்ஸ்அப் நிர்வாகத்தை இந்திய  அரசு கேட்டுக்கொண்டிருந்தது.  இதையடுத்து தனது பயன்பாட்டாளர்கள் எந்த வகையில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிர்வாகம் அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.

தவறான செய்திகள், தகவல்கள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் அப் நிர்வாகம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு புதிய வேண்டுகோளை முன்வைத்திருக்கிறது.  அதன்படி, வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் புதிதாக பதியப்பட்டதா  அல்லது ஃபார்வேர்ட் செய்யப்பட்டதா  என்பதை அறியும் வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. யார் அந்த தகவலை பதிவு செய்தது  என்பது  தெரியாதபட்சத்தில் அதன் உண்மைத் தன்மையை இருமுறை பரிசோதிக்க வேண்டும்.
புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது அதுதொடர்பான தகவல் உண்மையா என்பதை இணையதளத்தில் தேடி சரி பார்த்துக்கொள்வது அவசியம்.  ஒரு தகவலை உறுதிப்படுத்த,  செய்தி இணையதளங்களை பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி இணையதளங்களில் அந்த தகவல் இருந்தால் அது உண்மையானதாக இருக்க வாய்ப்பு உண்டு.

நம்பவே முடியாத தகவல், செய்தியாக இருந்தால் பெரும்பாலும் அது தவறான தகவலாகவே இருக்க வாய்ப்புள்ளது. அதன் உண்மைத் தன்மையே வேறு இடத்தில் சோதித்து அறிவது அவசியம்.  மக்களை அச்சுறுத்தும் மற்றும்  ஆத்திரப்படுத்தும் நோக்கோடு ஒரு தகவல் பகிரப்பட்டதாக உணர்ந்தால் அதை மற்றவருக்கு பகிரும் முன் இருமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

பரிச்சயமான இணையதளத்தின் பக்கம்போல சில இணைப்புகள் அனுப்பப்பட்டாலும் அதில் சில எழுத்துகளோ, வார்த்தைகளோ மாறி இருந்தால் அது தவறானதாக இருக்கும். பலமுறை உங்களுக்கு பகிரப்பட்டுள்ளது என்பதற்காக அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. தவறான தகவல்களே பெரும்பாலும் அதிகமாகவும், வேகமாகவும் பரவுகின்றன.