சென்னை:

காவலர்கள் செல்போன் உபயோகப்படுத்தக்கூடாது என்றால், காவல்துறை பற்றிய தகவல்களை அறிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவது எப்படி என்று தமிழக டிஜிபிக்கு, காவல்துறையினர் கேள்வி விடுத்துள்ளனர்.

தமிழகத்தில்  பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே அறிவித்த  தமிழக டிஜிபி ராஜேந்திரன் , தற்போது அனைத்து காவல்துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘அனைத்து மாநகர ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தங்களுக்குள் வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று  தெரிவித்து உள்ளார்.

அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மினாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் இருக்க வேண்டும். அந்த குரூப்பில் அந்த மாவட்டத்தில் காவலர்களின் சிறப்பான செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை புகைப்படம், வீடியோ மற்றும் சிறு குறிப்புடன் பதிவிட வேண்டும்.

எத்தனை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிக்கையை வரும் 18ம் தேதி (இன்று) காலை 10 மணிக்குள் காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் காவல் நிலையத்தின் பெயர், குரூப் அட்மின் பெயர், அந்த குரூப்பில் எத்தனை காவலர்கள் உள்ளனர், குரூப் தொடங்கப்பட்ட தேதி உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதே டிஜிபி ராஜேந்திரன்தான் சில நாட்களுக்கு முன்னர்  வேறொரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், போலீசார் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. செல்போன் பயன்படுத்தி னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்ததோடு மட்டுமல்லாமல், தலைமைச் செயலகத்தில் பணியின்போது செல்போன் உபயோகப்படுத்திய காவலரிடம் இருந்து செல்போனை பறித்து தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர் உருவாக்க வேண்டும் என்று கூறியிருப்பது காவல்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. செல்போன் உபயோகப்படுத்தாமல் வாட்ஸ்அப் குழுக்கள் எப்படி உருவாக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

டிஜிபியின் சுற்றறிக்கை முரண்பாடாக இருப்பதால், பழைய சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும் போலீசார் கூறி உள்ளனர்.