ஆடி வெள்ளி அன்று அம்மனை வழிபடுவது எப்படி?

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குச் சிறப்பான மாதம்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களைக் கட்டும்.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின் முதல் நாளைப் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.

ஆடிவெள்ளி அம்மனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஆடி இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமையன்று வருகிறது. இது மிகவும் விஷேசமாகும். இந்த ஆண்டு, ஆடி மாதம் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருகின்றன.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் அம்மனை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும்.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம்.

முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, காரப் பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

இரண்டாம் வெள்ளியன்று பருப்புப் பாயசமும், உளுந்து வடையும் செய்து நிவேதிக்க வேண்டும்.

மூன்றாம் வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல் செய்ய வேண்டும்.

நான்காம் வெள்ளியன்று ரவா கேசரி செய்து படைக்கலாம்.

பொதுவாக ஐந்தாம் வெள்ளிக்கிழமை பால் பாயசம் செய்ய வேண்டும்.

ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.