சென்னை,

18 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று 21வது ஆண்டு இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதலில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி தினகரன் தப்பியது எப்படி என்பது குறித்து விசாரணை அதிகாரி நல்லம நாயுடு கூறியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜெயலலிதா இறந்துவிட்டதால் முதல்குற்றவாளியான அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை சசிகலா நியமனம் செய்திருக்கிறார். அவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர் மட்டும் எப்படி தப்ப முடிந்தது என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக வெளிநாடுகள் வரை சென்று ஆதாரங்களை திரட்டி,  திறம்பட நடத்திய, விசாரணை அதிகாரி நல்லமநாயுடு வழக்கு குறித்து கூறியதாவது.

 

சொத்துக்குவிப்பு வழக்கின் 21 ஆண்டுகால பயணம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் நீதி வென்றுள்ளது என்று கூறியுள்ளார் வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு.

தனது குடும்பத்தினருடன் சென்னை அருகே பெரவள்ளுர் பகுதியில் வசித்து வரும் நல்லமநாயுடுக்கு, உச்ச நீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து அரசியல் கட்சியினரின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை வரவேற்ற நாயுடு, தினகரன் எப்படி இந்த வழக்கில் இருந்து தப்பினார் என்பது குறித்தும் கூறினார்.

ஆரம்பக்கட்டத்தில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில்  டிடிவி தினகரனும் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர்  லண்டனில் சொத்துக்களை வாங்கி இருந்தார். நான்  இது பற்றி விசாரிக்க நேரடியாகவே லண்டன் சென்று ஆவணங்களை சேகரித்து வந்தேன்.

ஆனால்,  சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தாமதமானதால், டிடிவி தினகரனை அந்த வழக்கில் இருந்து தனியாக பிரித்து, தனி வழக்காக மாற்றினோம்,  இதன் காரணமாகவே அவர் தண்டனையில் இருந்து தப்பிக்க  முடிந்தது என்றார்  நல்லமநாயுடு.

தப்போது அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள தினகரன் மீது, அந்நியசெலவாணி மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.