புதுடெல்லி:

ஆயுதம் ஏந்தியவனுக்கு ஆயுதமே முடிவு என்பது பாஜக விசயத்தில் உண்மைதான் போலிருக்கிறது. ட்விட்டரை பயன்படுத்தி செல்வாக்கை வளர்த்துக் கொண்ட மோடிக்கும் பாஜகவுக்கும் அதே ட்விட்டர் பெரும் சரிவையும் ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.


சமூக வளைதலங்களை மட்டுமே நம்பி கடந்த 2014 தேர்தலில் களத்தில் இறங்கியது பாஜக. குஜராத்தை முன் வைத்து பல பிரச்சாரங்களை செய்து நாடு முழுவதும் மோடிக்கும் பாஜகவுக்கு ஆதரவாக பிம்பம் உருவாக்கப்பட்டது.

பிரதமரான பின்பும் மோடி ட்விட்டரில் பிஸியானார். ட்விட்டரில் அவரை பல லட்சம் பேர் தொடர்ந்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக நிலைமை தலைகீழாகி விட்டது. பாஜகவுக்கும் மோடிக்கும் எதிரான ஹேஸ் டேக் தேசிய அளவில் தினமும் ட்ரெண்டாகி பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

‘கோ பேக் மோடி’ என்ற ‘ஹேஸ் டேக்’ தான் தற்போது பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. ட்விட்டரில் நடத்தப்படும் வாக்கெடுப்புகள் அனைத்துமே மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராகவே அமைந்துள்ளன.

பாஜக ஆதரவாளர்களால் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள்கூட எதிராகவே உள்ளன.
திரைப்பட இயக்குனரும், பாஜக ஆதரவாளருமான விவேக் அக்னிஹேத்ரி, நரேந்திர மோடிக்கும் ராகுலுக்கும் இடையே விவாதம் நடந்தால், ராகுலுக்கு எவ்வளவு மதிப்பெண் தருவீர்கள்? என்று கேட்டிருந்தார்.

ராகுலுக்கு 100 மதிப்பெண்கள் என 56% பேர் வாக்களித்தனர். விவேக் அக்னிஹோத்ரியை பின் தொடரும் 1.4 லட்சம் பேரில் பெரும்பாலோர் ராகுலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இவரது வாக்கெடுப்பு பிரதமர் மோடிக்கு எதிராகவே அமைந்துள்ளது.

பாஜகவின் ஆதரவு தொலைக் காட்சியான ‘டைம்ஸ் நவ்’ நடத்திய ட்விட்டர் வாக்கெடுப்பில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் 90 நாட்கள் உள்ளன. மோடியின் 5 வருட ஆட்சியில் நீங்கள் பயனடைந்தீர்களா? என்ற கேள்விக்கு, இல்லை என்று 85% பேர் வாக்களித்தனர்.

பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்ததையொட்டிய வாக்கெடுப்பில், பிரதமர் மோடியை பிரியங்கா எதிர்கொள்ள முடியுமா? என இதே தொலைக் காட்சி கேள்வி எழுப்பியிருந்தது. 60% பேர் ஆம் என்று வாக்களித்திருந்தனர்.
பாஜகவை தீவிரமாக ஆதரிக்கும் ரிபப்ளிக் தொலைக்காட்சியில், 55 வருட காங்கிரஸ் ஆட்சியைவிட 55 மாதங்கள் ஆட்சி செய்த மோடி அதிகம் செய்துவிட்டாரா? என ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியது.
56% பேர் இல்லை என மோடிக்கு எதிராக வாக்களித்தனர்.
இது குறித்து சி&வோட்டர் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறும்போது, பாஜகவுக்கு செல்வாக்கு மோசமாக இருப்பதையே ட்விட்டர் வாக்கெடுப்புகள் காட்டுகின்றன. பெட்ரால்,டீசல் விலை உயர்வும் பாஜகவுக்கு எதிரான மன நிலை உருவானதற்கு காரணம் என்றார்.
இதற்கிடையே, ட்விட்டர் பாரபட்சமாக செயல்படுவதாக பாஜகவுக்கு ஆதரவு அமைப்புகள் சில தினங்களுக்கு ட்விட்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.