ரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே.. ஏன், அரசு ஊழியர்கள் என்றாலே பணியில் அக்கறை இல்லாதவர்கள் என்ற பொதுக்கருத்து உண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்கான ஆசிரியர்களும் நிறையவே இருக்கிறார்கள்.

கட்டுப்பாடு, கல்வி, விளையாட்டு என தம் மாணவர்களுக்கு ஆத்தமார்த்தமாக உழைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதுபோன்ற நெகிழவைக்கும் ஒரு செய்திதான் இது.

தேனி மாவட்டம் கூடலூரில் (புதூர்)ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்படுகிறது.  இந்தப்பகுதியைச் சேர்ந்தவர நஞ்சப்பா.  திருப்பூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிபவர்.

விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தவர், தற்செயலாய் நண்பர் ஒருவர் சொல்லி இப்பள்ளிக்குள் சென்று பார்த்திருக்கிறார்.

பள்ளியைச் சுற்றி புதர்கள்.. கழிவரை பராமரிக்கப்படாமல் கிடக்க.. மனம் வேதனைப்பட்டிருக்கிறார். உடனே தனது அணியைச் சேர்ந்தோருடன் விவாதித்தார். பிறகு பள்ளியில் தலைமையாசிரியர்,  ஆசிரியர்களுடன் சந்தித்துப்  பள்ளியின் பராமரிப்பு குறித்து விவாதித்தனர்.

அனைவரும் இணைந்து திட்டமிட்டனர். மிக முக்கியமாக தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட பல தேவைகள் பட்டியலிடப்பட்டன. மேலும் வகுப்பறைச் சுவர்களுக்கு வண்ணமேற்றுவது,  ஏற்ற ஓவியங்களை வரைவது, பாதுகாப்பான விளையாட்டு மையம், பசுமைப்பூங்கா உள்ளிட்ட குழந்தைகளின் உளவியலை உணர்ந்து பள்ளியைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது.

ஆசிரியர்கள் ஆளுக்கு பத்தாயிரமென தலைமையாசிரியரோடு இணைந்து நாற்பதாயிரம் தர முன்வந்தனர். அதே அளவு பணத்தை அணி சார்பாக செலுத்துவதாக முடிவெடுத்தனர்.

கடந்த காலாண்டு காலாண்டு விடுமுறையில் சுறுறுப்பாக வேலை துவங்கியது.

இப்பள்ளியில் படித்து இன்று நல்ல நிலையிலிருக்கும்  பலரை தேடிக்கண்டறிந்து இது குறித்து தெரிவிக்கப் பட்டது.   வேலைகளை நேரில் பார்க்க புரவலர்கள் அழைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் நிதியாக இல்லாமல் பொருளாகப் பெறப்பட்டது.

இதில் இன்னொரு ஆச்சரியம், இங்கு கட்டிட மற்றும் இதர வேலைகளில் ஈடுபட்டவர்கள் தொழில் முறை பணியாளர்கள் அல்லர். முழுக்க உள்ளூர் இளைஞர்களே ஈடுபட்டனர்.

சில நிபுண பணிகளுக்கு மட்டும் உரிய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.  மற்றபடி ஒரு நாளைக்கு 30 பேர் என இளைஞர்கள் ஈடுபட்டனர்.

இவர்களை அனுப்பி வைத்து உதவியிருக்கிறார் திரு.அழகேசன். அப்பகுதியில் ராணுவத்தேர்வுக்கு பயிற்சி மையமும் உடற்பயிற்சி கூடமும் நடத்துபவர்.

ஆசிரியர்கள் சீனிவாசன், ராஜிவ், அழகேசன், சுரேஷ் கண்ணன் , முன்னாள் மாணவர் ஜெயக்குமார் ஆகியோர் ஏழுநாளும்   சொந்த வீடு கட்டவதுபோல் பரபரத்து பள்ளியிலேயே கிடந்தனர்.

சக ஆசிரியர்களின் பணி பாரத்ததை பகிர இராஜேஷ் கண்ணன் , மதன் குமார்,வசந்த்  உள்ளிட்ட உள்ளூர் நண்பர்கள்  வந்து இணைந்து கொண்டனர்.

.வண்ணச்சுவர்களும்,  வரைந்த ஓவியங்களும். பள்ளிக்கூடத்தை கலைக்கூடமாக்கிய ஓவியஆசிரியர்கள் சின்னமனூர் முருகன், கம்பம் பாண்டியன் மற்றும் சித்தேந்திரன்.

காலாண்டு விடுமுறை முடிந்து  பள்ளி திறந்ததும் நுழைந்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.  வண்ண ஓவியங்களோடு தனது புது வீட்டில் குதிக்கிறார்கள். இனி அவர்களின் கற்றலும் இனிதாகும்.

ஊரிலிருப்போரும் இந்த கனவுப் பள்ளியை வந்துபார்த்த வண்ணம் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை அதிகரிக்கும்.

வசதிகள் இல்லை என்றுதானே மக்கள் தனியாரை நாடுகிறார்கள். இனியெல்லாமிருக்கு…வாங்க. . . அழைக்கிறது இந்த அரசுப்பள்ளி.!

முக நூலில் இந்த செய்தியைப் படித்த பல ஆசிரியர்கள், தங்கள் பள்ளியிலும் இதே போல செயல்பட ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.

ஆசிரியர்கள் என்றில்லை.. நம் பகுதியில் பராமரிப்பு இன்றி கிடக்கும் அரசுப் பள்ளிகளை சீர் படுத்த நாமும் முயலாமே.

தகவல் நன்றி: தமிழ்நாடு ஆசிரியர்கள் வலைப்பூ