டோக்கியோ: அடுத்த 2021ம் ஆண்டில் கொரோனா தாக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் நாட்டு அமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, 2020ம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், 2021ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமைச்சராக இருப்பவர் சுகோ ஹஷிமோடோ. இந்நிலையில், அவர் கூறியுள்ளதாவது, “ஒலிம்பிக் போட்டிக்காக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து செயல்படுகிறார்கள். விளையாட்டு வீரர்களும் அடுத்த ஆண்டு போட்டிகளுக்காக பெரியளவில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்கள் எப்படியேனும் விளையாட்டுகளை நடத்துவோம். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்களின் அனைத்து முயற்சிகளும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

விளையாட்டு வீரர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்களை சமாளிப்பது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திட்டங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கவனித்து வருகின்றனர்” என்றார் அவர்.