மின்சாரம் தாக்கிய சிறுமிக்கு ரூ. 50000 நஷ்ட ஈடு : தமிழக் அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை

ரசுப் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுமிக்கு தமிழக அரசு ரூ.50000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வி கள்ளிப்பாளையம் என்னும் சிற்றூரை சேர்ந்தவர் மணிகுமார்.  இவருடைய மகள் அந்த ஊர் பஞ்சாயத்து ஒன்றியம் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தார்.   கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் 16 ஆம் தேதி அன்று இந்த சிறுமி பள்ளியில் ஓரத்தில்  அமைந்திருந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவர் மீது மேலே பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து அவருக்கு மின்சார தாக்குதல் ஏற்பட்டுக் காயமடைந்தார்.  அவர் குரலைக் கேட்ட ஒரு ஆசிரியை ஓடி வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றி உள்ளார்.   சிறுமிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.   அவர் 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் 16 ஆம் தேதியில் இருந்து 23 வரை சிகிச்சையில் இருந்தார்.

அதன்பிறகு அவர் கோவையில் உள்ள நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.  இந்த நிகழ்வு குறித்து மணிகுமார் கா. மாணிக்கப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அந்த காவல் நிலைய துணை ஆய்வாளர் அமல் ஆரோக்கிய தாஸ் இதற்கு குற்றப்பத்திரிகை பதியாமல் விபத்து அறிக்கையாக பதிந்துள்ளார்.     இதையொட்டி மணிகுமார் வழக்கு மனு ஒன்றை மனித உரிமை  அணையத்திடம் அளித்தார்.

அவர் அந்த மனுவில், “மின் கம்பி அறுந்து விழுந்ததற்கு முழுப் பொறுப்பு பல்;லடம் பகுதியின் மின் பகிர்வு மற்றும் பராமரிப்பு துணை பொறியாளரான சத்யநாராயணனைச் சாரும்    அவர் தனது பணியைச் சரிவரச் செய்யாததால் கம்பி அறுந்து விழுந்துள்ளது.  இது விபத்து அல்ல.  பணியில் கவனமின்மை ஆகும்.  இதனால் ஒரு சிறுமிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இது அந்த சிறுமியின் மனித உரிமையை மீறிய குற்றமாகும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மின் வாரியம் சார்பில், “இந்த பள்ளி வளாகத்தில் மின் கம்பிகள் பழுதடைந்துள்ளது குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  ஆனால் அந்த சிறுமி எச்சரிக்கையை அறியாமல்  அந்த பகுதிக்குச் சென்றுள்ளார்.    அத்துடன் ஏற்கனவே அறுந்து விழுந்திருந்த கம்பிக்கு அருகில் சென்றதால் அவருக்கு இடது கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.  எனவே இது விபத்து எனக் கருத வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது

இந்த வாதங்களுக்குப் பிறகு மனித உரிமை ஆணையர் ஜெயச்சந்திரன், “மின்சாரக் கம்பி ஏற்கனவே அறுந்து விழுந்ததாக வைத்துக் கொண்டாலும் அதை அவ்வாறு பாதுகாப்பின்றி விட்டுச் சென்றது  மின்வாரிய பொறியாளரின் தவறாகும்.   அவர் சரியான முன்னெச்சரிக்கைகளை செய்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.    இதில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறை உதவி ஆணையர் மீது எவ்வித தவறும் கிடையாது.

அத்துடன் மின்சாரம் தாக்கியதால் பாதிப்படைந்த சிறுமிக்கு தமிழக அரசு ரூ.50000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.  அது மட்டுமின்றி மின்சார விதிகள் 1935 இன படி சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மின் வாரியத்துக்கு வலியுறுத்த வேண்டும்.   பணியில் கவனமின்றி இருந்த ஊழியர் மீது துறை சம்பந்த விசாரணை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.