பிஹெச்டி-க்கு தலைப்புகளை முடிவு செய்யும் மத்திய அரசு உத்தரவை எதிர்த்து கேரள பேராசிரியை ராஜினாமா

திருவனந்தபுரம்:

பிஹெச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான தலைப்புகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவை எதிர்த்து கேரள பல்கலைக்கழக பேராசிரியை ராஜினாமா செய்துள்ளார்.


பிஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படிப்போர் தேர்வு செய்யும் தலைப்புகள் தேசிய முக்கித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என மார்ச் 13-ம் தேதி அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

இத்தகைய முடிவு ஆராய்ச்சி படிப்பில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி, கேரள பல்கலைக்கழகத்தின் பேராசிரியை மீனா பிள்ளை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து மீனா பிள்ளை செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரளாவில் உள்ள சிறிய பழங்குடியின மக்களை பற்றியதாக எங்கள் ஆராய்ச்சி உள்ளது. இதனை செய்யக் கூடாது என்று எப்படி தடுக்க முடியும். ஆராய்ச்சிப் படிப்புக்கு எந்த தலைப்பை தேர்வு செய்வது என்பதை, ஆராய்ச்சி செய்வோர்தான் முடிவு செய்ய வேண்டும்.

எது தேவை, எது தேவையற்றது என யார் முடிவு செய்வது? குறிப்பிட்ட தலைப்பில் மட்டும் ஆராய்ச்சி இருக்க வேண்டும் என்பது உயர் கல்வியின் முக்கியத்துவத்துக்கு எதிரானதாகும்.

இந்த பகுதி மட்டும்தான் ஆராய்ச்சிப் படிப்பில் தலைப்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்தால், ஆராய்ச்சியாளர்களுக்கு சுதந்திரமான ஆய்வு செய்யும் போக்கு எப்படி வரும்” என்றார்.