ஞாநி

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி நேற்று  முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் மறைந்தார்.  இறுதிவரை தனது கருத்துக்களில் மிக உறுதியுடன் நின்றவர் அவர்.

சமீபகாலமாக ஓ பக்கங்கள் என்ற தலைப்பில் அவரது பேச்சுக்கள் யு டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.

மறைவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அவர் பேசிய கடைசி வீடியோ இது.

இந்த வீடியோவில் ஞாநி சொல்லியிருப்பதன் சுருக்கம் இங்கே :

“ஒன்று, ஆண்டாள் பற்றிய கதையே போலியாக இருக்க வேண்டும்.

இரண்டு, ஆண்டாள் இந்தக் கவிதைகளை எழுதியபோது அவரது வயது 22-ஆக இருக்கலாம். ஆனால் ஆண்டாள் தனது 15-வது வயதில் இறைவனுடன் கலந்துவிட்டார். 15 வயது சிறுமி இத்தனை இலக்கிய நயத்தோடு எழுதியிருக்கவே முடியாது..!

ஏழாம் நூற்றாண்டில் தாசி என்பவர் இறைவனை மனத்தால் திருமணம் செய்து கொண்ட பெண். அவருக்கு அக்கால சமூகத்தில் மிகப் பெரிய பெயரும், பெருமையும் இருந்தது.

அந்த தாசி பெண் இறந்துபோனால் அவர் எந்தக் கோவிலில் இருந்தாரோ, அந்தக் கோவில் அன்றைக்கு மூடப்படும். அனைத்து சாமி சம்பிரதாயங்களும் நிறுத்தப்படும். கோவில் வாசலில்தான் அந்த தாசி பெண்ணின் உடல் கிடத்தப்பட்டு இறுதியாக தூக்கிச் செல்லப்படும்.

ஆண்டாள் – வைரமுத்து

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான் இது போன்ற தாசி பெண்களை பாலியல் தொழிலுக்கு ஆட்படுத்தியும், ஊரின் மிகப் பெரிய தன்வந்தர்களுக்கு வைப்பாட்டியாகவும் வைத்திருக்கும்படி சூழல் ஏற்பட்டது.

மூதறிஞர் ராஜாஜி 1946-ல் ஆண்டாள் கதை கட்டுக் கதை என்றும், பெரியாழ்வாரே இந்தக் கவிதைகளை எழுதி அதனை பெண் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

யாரோ ஒருவர் எழுதிய செய்தியை மேற்கோள் காட்டியமைக்காக வைரமுத்து வருத்தமோ, மன்னிப்போ கேட்க வேண்டிய அவசியமில்லை.!

எச்.ராஜாவும், மற்ற இந்து மத பிரச்சாரர்களும் வைரமுத்துவையும், அவரது குடும்பத்தினரையும், தாயையும் பழித்துப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

அதேபோல் பாரதிராஜா வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து ‘நாங்கள் ஆண்ட சாதி.. அமைதியாக இருக்கிறோம். மீண்டும் ஆயுதம் தூக்க வைத்துவிடாதீர்கள்’ என்றெல்லாம் பேசுவது முற்றிலும் தவறு.. அது சாதி வெறியைத் தூண்டுகிறது.

பா.ஜ.க.வும், சங் பரிவார் அமைப்புகளும் இப்போது இந்துக்கள் மற்றும் இந்து அல்லாதவர்கள் என்று தமிழ்ச் சமூகத்தையே இரண்டாக பிரிக்கும் வேலையைச் செய்த வருகிறார்கள். அதில் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது..

இந்த நாட்டில் நாம் பேச வேண்டிய விஷயங்கள், விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வாருங்கள் அதைப் பற்றிப் பேசுவோம். இதைப் புறந்தள்ளுவோம்..!” என்று ஞாநி பேசியிருக்கிறார்.

வீடியோவைப் பார்க்க, கீழே உள்ள தொடுப்பை க்ளிகவும்..

அந்த வீடியோ: