தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்- பீகார்

பீகார்:
பீகாரில் அடுத்த வாரம் மாநிலத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இது கொரோனா வைரஸ் விதிகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தபோதிலும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பிரச்சாரம் அதிகாலையில் நடந்தாலும், மாலையில் நடந்தாலும், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்றும், பெரும்பாலான இடங்களில் 7,000- 8,000 பேர் வரை கலந்து கொள்வதாகவும் சில இடங்களில் 15,000 பேர் கலந்து கொள்வதாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்த ஒருவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடந்த இந்த பிரச்சாரங்களை தொடர்ந்து கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதாவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: பிரச்சாரத்தில் இவ்வளவு மக்கள் கலந்து கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! பீகாரில் கடல்போல் திரண்ட இந்த மக்கள்… அவர்களுக்கு மாற்றம் வேண்டும் என்பதையும், பீகார் மாநிலத்தின் வளர்ச்சி வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லி உள்ளனர். திறமையற்ற என்டிஏ அரசு 15 ஆண்டுகளாக பீகார் மாநிலத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறது, இனி வளர்ச்சி பாதையில் செல்வோம், நன்றி… என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பற்றி பேசிய மூத்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளதாவது:
பிரசாரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதை பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், இதிலிருந்து மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று தெரிகிறது, இது முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு பேரிடியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்… மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள்! என்று தெரிவித்துள்ளார்.