சென்னையில் வாகனம் வைத்துள்ளவரா? இனி ‘செத்தாண்டா சேகர்’ நிலைமைதான்..

சென்னை மாநகரில் ‘நோ-பார்க்கிங்’’ பகுதியில் வாகனங்களை நிறுத்தி , போலீசில் அபராதம் செலுத்துவது, நகரவாசிகளுக்கு பழகிப்போய் விட்டது. அந்த பழக்கத்தை இனியும் தொடர்ந்தால் கூடுதல் தண்டம் கொடுக்க நேரிடும்.

நோ-பார்க்கிங் பகுதியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துவோர் இதுவரை போலீசுக்கு அபராதமாக ( முதல் முறை தவறு இழைப்போர்) நூறு ரூபாய் செலுத்தினர்.

இது தவிர நோ-பார்க்கிங் எரியாவில் நிற்கும் வாகனத்தை இழுத்துவரும் இழுவை வண்டி ஓட்டுநர் மற்றும் வாகனத்தை இழுவை வண்டியில் ஏற்றும் உதவியாளருக்கு 375 ரூபாய் கொடுத்து வந்தனர்.

இழுவை வண்டியில் வாகனம் ஏற்றும் உதவியாளருக்கு குறைந்த கட்டணமே வழங்கப்படுவதால், பல நேரங்களில் உதவியாளர்கள் கிடைக்காமல் போலீசார் தவிக்க நேரிடுகிறது.

எனவே இழுவை வண்டி மற்றும் உதவியாளர்கள் கட்டணத்தை உயர்த்திகொள்ள தமிழக அரசின் உள்துறை அனுமதி அளித்தது.

இதையடுத்து நோ-பார்க்கிங் பகுதியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துவோர் வழக்கமான அபராதத்துடன், இழுவை கூலி மற்றும் உதவியாளர் கூலியாக 450 ரூபாய் கொடுக்க வேண்டும்.

இதே குற்றம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வழக்கமான அபராதத்துடன் இழுவை கூலி மற்றும் உதவியாளர் கூலியாக 225 ரூபாய் கொடுக்க வேண்டும். முன்னர் இழுவை கூலி மற்றும் உதவியாளர் கூலி இரு சக்கர வாகனங்களுக்கு 160 மட்டும் வசூலிக்கப்பட்டது.

ஒழுங்கா இல்லாவிட்டால் சென்னையில் காலை வெக்கிற இடமெல்லாம் வாகன ஓட்டிகளுக்கு கண்ணிவெடிதான் போல….

-ஏழுமலை வெங்கடேசன்