சித்துவின் தழுவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பஞ்சாப் முதல்வர்

ண்டிகர்

பாகிஸ்தான் ராணுவ தளபதியை சித்து கட்டி தழுவியது தவறான செய்கை என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறி உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெகரீக் ஈ இன்சாஃப் கட்சித்தலைவருமான இம்ரான் கான் சனிக்கிழமை பாக் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.   அந்த விழாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துக் கொண்டார்.   இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட ஒரே இந்தியர் சித்து என்பது குறிப்பிடத்தக்கது.   மற்ற கிரிக்கெட் வீரர்களான கவாஸ்கர் மற்றும் கபில்தேவுக்கு அழைப்பு வந்தும் அவர்கள் செல்லவில்லை.

பதவி ஏற்பு நிகழ்வில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி காமர் ஜாவத் பாஜ்வாவை சித்து கட்டித் தழுவினார்.   அது மட்டுமின்றி பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி அதிபரான மசூத் கான் அருகே அமர்ந்திருந்தார்.   இதற்கு இந்தியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.     சித்துவின் இத்தகைய செயல்கள் குறித்து செய்தியாளர்கள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இடம் கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு அமரீந்தர் சிங், “பாகிஸ்தான் ராணுவ தளபதியான காமர் ஜாவத் பாஜ்வாவை நவ்ஜோத் சிங் சித்து கட்டித் தழுவியது மிகவும் தவறான செயலாகும்.   அதே நேரத்தில் மசூத் கான் அருகில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டதால் அங்கு அமர்ந்ததாக சித்து கூறி உள்ளார்.    அத்துடன் அவர் யார் என்பதை சித்து அறிந்திருக்காமலும் அவருடன் அமர்ந்திருக்கலாம்” என பதில் அளித்துள்ளார்.