வாஷிங்டன்:

பூமியைவிட செவ்வாய் கிரகத்தில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு இருப்பதால் மனிதன் அங்கு வாழ முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் இருந்துள்ளது. அங்கு உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.

இதன்பிறகு மிகப்பெரிய ஒரு விண்கல் மோதியதால் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடையாளமாக செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு தற்போதும் காணப்படுகின்றது. இந்த மோதலில் சிதறிய விண்கற்களில் 7.5 சதவீதம் பூமியில் விழுந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகள் 1984ம் ஆண்டில் அண்டார்டிக்காவில் விண்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் மோதிய விண்கல்லின் சிதறல்கள் என கூறப்பட்டது. 1996ம் ஆண்டி-ல் நாசா விஞ்ஞானி டேவிட் மெக்கி என்பவர் இதில் “நானோ பாக்டிரியாவின்” எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.

இதன் பின்னர் செவ்வாய் கிரக ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. பெரும்பாலான நாடுகள் இந்த ஆராய்ச்சியில் ஆர்வம் காட்ட தொடங்கின. மனிதர்களுக்கு செவ்வாய் கிரகம் தான் அடிப்படை என பல விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.

இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய 2013ம் ஆண்டில் ‘மங்கள்யான்’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2014 செப்டம்பர் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தை அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்புகின்றன. அதற்கான விண்கலம் இன்று அனுப்பபடுகிறது. அக்டோபர் 19-ம் தேதி அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். .

செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு செல்வோருக்கு புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இரு மடங்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதிரி அமைப்பு ஒன்றினை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்டவெளியிலுள்ள கதிர் வீச்சுக்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தை சென்றடைவது இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நவேடா பல்கலைக்கழக குழு ஒன்று விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கும் உடல் ஆரோக்கியப் பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டது.

‘‘2011ம் ஆண்டு நவம்பர் முதல் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் பூமியில் காணப்படும் கதிர்வீச்சுக்களை விட செவ்வாய் கிரகத்தில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு காணப்படுகிறது’’ என்று அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பப்படுவது கேள்விகுறியாகியுள்ளது.