சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் கையெழுத்திட வலியுறுத்தி,  சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 7 நகரங்களில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலிக்கு பேரறிவாளன் தாய் ஏற்பாடு செய்து வந்த நிலையில், இன்று வெற்றிகர மாக நடைபெற்றது.  சென்னையில் நடைபெற்ற பேரணியில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பங்கேற்றார்.

அவருடன்  திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நடிகர் சத்யராஜ்,  இயக்குநர்கள் வெற்றி மாறன், ராம், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் கருணை மனுக்கள் மீது  தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம்  என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதையடுத்து தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விதி எண்.161-இன் கீழ் ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது.

ஆனால், ஆளுநர் அதுகுறித்து எந்தவித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், பேரறிவாளன் உள்பட  விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 7 நகரங்களில் இன்று  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன்படி சென்னை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, புதுச்சேரி ஆகிய 7 நகரங்களில் இன்று (சனிக்கிழமை) மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள், திராவிட கழகம், திராவிடர் விடுதலை கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, எஸ்டிபிஐ என பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

இதே போல் மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, பேரறிவாளன் உட்பட 7 பேரை சட்டத்தை மீறாமல் உடனே விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசியலமைப்புச்சட்டம் கேள்விக்குறியாக மாறாமல் உடனே 7 பேரை விடுவிக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

கருணை அடிப்படையில் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்  நடிகர் சத்யராஜ் கூறினார்.