கேரள வெள்ள மனிதர்கள் உருவாக்கியதுதான்!:  பிரபல இயற்கை ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்

கேரளா இப்போது சந்தித்து வரும் பேரழிவுக்கு மனிதத் தவறுதான் காரணம் என்று பிரபல இயற்கை ஆராய்ச்சியாளர் மாதவ் காட்கில் தெரிவித்திருக்கிறார்.

கோவா தலைநகர் பனாஜியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரபல இயற்கை ஆராய்ச்சியாளர் மாதவ் காட்கில் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் தெரிவித்ததாவது:

“கேரளாவில் ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களும், சட்டவிரோத குவாரிகளுமே இப்போதைய வெள்ள பேரழிவுக்குக் காரணம்.

ஆக்கிரமிப்பு குறித்து அறிய  அமைக்கப்பட்ட  எங்கள் ஆய்வுக் குழு 2011ல் அறிக்கை அளித்தது.  அதில் கேரளாவின் பல பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் வருவதால் அவற்றை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால்  அப்போது மாநில அரசு அதை நிராகரித்து விட்டது.

மற்றபடி கேரளா இப்போது கண்டுள்ள மழையளவு, இதுவரை இல்லாத அளவல்ல. ஆனால் ஆக்கிரமிப்பு மற்றும் வனத்தை அழித்தது போன்ற காரணங்களால் வெள்ளப்பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.

சட்டவிரோத குவாரிகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்தான் இதற்குக் காரணம். ஆக இந்த பேரழிவு மனிதர்களால் ஏற்பட்டதுதான்.

தங்களது குழு அளித்த அறிக்கையை இனியாவது மாநில அரசு செயற்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.