5 மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை கோரிய வழக்கு…..உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

--

டில்லி:

மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேர் விடுதலை செய்யக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா கோரேகான்பீமா கலவரம் தொடர்பான விசாரணையின் போது பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்ய திட்டம் தீட்டிய கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் மாவோயிஸ்ட் ஆதரவு மனித உரிமை ஆர்வலர்கள் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, வரவர ராவ், சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. வீட்டுக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இவர்களை விடுதலை செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்பான ஆவணங்களை 24ம் தேதிக்கு முன் ஒப்படைக்குமாறு மகாராஷ்டிரா போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.