அவதூறு கருத்து – காவலதிகாரி வெள்ளைத்துரை மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மனித உரிமைகள் ஆணையத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுக்க, மாநில காவல்துறை இயக்குநருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தின் கூடுதல் துணை கமிஷனராக இருக்கும் வெள்ளத்துரை ஒரு மாத இதழுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “குற்றவாளிகள் அதிகரிப்பதற்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் முக்கிய காரணம்” என்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகள் ஆணையத்தின் கண்ணியத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்தை தெரிவித்த காரணத்திற்காக மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையின் கருத்து குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுதொடர்பான விசாரணை அறிக்கையை மாநில காவல்துறை இயக்குநர் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளார்.