கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, மிகத் தாமதமாக விழித்துக்கொண்ட மோடி அரசு, திடீரென, எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாத ஒரு ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்தியது.
அந்த தருணம் தொடங்கி, அடுத்த சில நாட்களில் தொடங்கியது உள்நாட்டு அளவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சோதனை காலம்! அதாவது, அவர்கள் தங்கள் வாழ்நாளில் இதுவரை கண்டிராத அல்லது கற்பனை செய்து பார்த்திராத மாபெரும் கொடுமை!
தாங்கள் புலம்பெயர்ந்த இடங்களில் அன்றாடம் காய்ச்சிகளாக இருந்த அவர்கள், வேலை மற்றும் போக்குவரத்து தடைப்பட்டவுடன், உணவுக்கோ, தொடர்ந்த உயிர்வாழ்தலுக்கோ வழியின்றி போயினர். அவர்களை எந்த அரசுகளும் கணக்கில் கொள்ளவில்லை.

அவர்களிடம் ஓட்டு வாங்கும் அரசுகள், அவர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை என்ற புரிதல், அவர்களுக்கு ஏற்பட்டதோ இல்லையோ, பல சமூக ஆர்வலர்களுக்கு ஏற்பட்டது அப்போதுதான்.
ஆங்காங்கே மாட்டிக்கொண்ட அவர்களுக்கு, சோற்றுக்கு வழியில்லாத சூழலில், போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், நெடுந்தொலைவில் உள்ள தங்களுடைய சொந்த ஊர்களுக்கு, சுமைகளையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு நடந்துசெல்ல வ‍ேண்டிய ஒரு அவலம்!
ஆம், சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் மானுடப் பேரவலம்!

அரசுகள் பொருட்படுத்தாத சூழலில், சில தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அவர்களுக்கான உதவிகளை தங்களால் இயன்றளவு செய்தார்கள். ஆனால், அந்த உதவி இவர்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும்!
வெப்பம் கொல்லும் காலநிலையில், கானல் நீர் காட்சியளிக்கும் நெடுஞ்சாலைகளில் உள்நாட்டு அகதிகளாய் நடையைத் துவக்கினர் அந்தப் பாவப்பட்ட பிறவிகள்! சரி, அரசுகள்தான் இப்படியென்றால், நாட்டின் உச்சநீதிமனறம் கூட, இவர்களின் துயரைக் கண்டுகொள்ளாது புறந்தள்ளியது இந்த சமூகத்தின் தராதரத்தை மற்றுமொரு முறை கேள்விக்கு உள்ளாக்கியது!
நடந்தே பல நூறு கிலோமீட்டர்களை (வாழும்)வழியின்றி கடக்கும் அவர்களை, (போகும்)வழியில் காவல்துறையினர் மடக்கும் கொடுமைகள் வேறு! இதனால், ரயில் பாதைகளைத் தேர்வுசெய்யும் அவர்கள், அங்கும் ரயிலில் அடிப்பட்டு சாகும் கொடுமைகள்!

சரக்கு & சிமெண்ட் லாரிகளில் மறைந்தே, பல நூறு கிலோமீட்டர்களை கடக்கவும் பலர் துணிந்தனர். மொட்டையான சரக்கு லாரிகளில், தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் முண்டியடித்துக் கொண்டு செல்லும் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றனர்.
இதற்கிடையே சில மாநிலங்களில், சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கும் அவர்களிடம் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இன்னும் கொடுமையாக, டெல்லியிலுள்ள தங்கள் மாநில தொழிலாளர்களை அழைத்துவர பேருந்துகளை ஏற்பாடு செய்த உத்திரப்பிரதேச மாநிலத்தின் காவி அரசு, பாவப்பட்ட மக்களிடையே கொள்ளைக் கட்டணத்தை வசூலித்த பேரவலமும் நடைபெற்றது!
தன் சொந்த மக்கள், மானுடப் பெருந்துயரில் சிக்கிய தருணத்திலும், அவர்களைப் பற்றி எந்தவிதப் பொருட்படுத்தலையும் செய்யாது, முதலாளிகளுக்கான சலுகைகளை மும்முரமாக மோடி அரசு அறிவித்துக் கொண்டிருக்க, சில அரசியல் கட்சிகள் செய்த உதவிகளும் அரசியலாக்கப்பட்டு, அவற்றுக்கு தடங்கல் ஏற்படுத்தப்பட்டன.

ஆக மொத்தத்தில், மூன்று கட்ட ஊரடங்கு முடிந்து, இப்போது நான்காம் கட்ட ஊரடங்கும் துவங்கிவிட்டது. இதனோடு சேர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்களின் துயரமும் தொடர்ந்து கொண்டிருக்க, இவையெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டா? என்று சொல்லாமல் சொல்லும் வகையில் நடந்து கொள்கின்றனர் மோடி குழுவினர்!
உண்மைதான், அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டோ அல்லது புதியதோ அல்ல. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற ஒரு பொருளாதார மற்றும் மானுடப் பேரிடரை ஏற்கனவே கேஷுவலாக நிகழ்த்தியவர்கள்தான் அவர்கள்!
அதன்மூலம் இந்த நாட்டின் சாமானிய மக்கள் அடைந்த துயரத்தையும், பெரும்பான்மை மக்களின் பொருளாதார வாழ்க்கை சீரழிந்துப் போனதையும் பலவகைகளிலும் நியாயப்படுத்தி, சாதாரணமாக கடந்து சென்றவர்கள் அவர்கள்!

அவர்களின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்றும் வர்ணிக்கப்படுகிறது.
அதன்பிறகு, ஜிஎஸ்டி -யை திடீரென எந்த திட்டமிடுதல்களும் இல்லாமல், மாநில உரிமைகளைப் பறிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமல்படுத்தியதன் மூலம், மற்றொரு பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களும் சாமானிய மக்களே!
இதற்கிடையில், விவசாயிகளின் பெருந்துயரம், பலகோடி பேர்கள் வேலையிழப்பு உள்ளிட்ட பல அவலங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. ஆனால், இவை அன‍ைத்துமே அவர்களுக்கு டேக் இட் ஈஸிதான்!

அவர்களின் இந்த வழக்கமானப் பாரம்பரியம்தான் இப்போதும் தொடர்கிறது!
 
– மதுரை மாயாண்டி