பீஜிங்

கொரோனா வைரஸ் தாக்குதல் சிகிச்சைக்கான மருந்தைச் சீனாவில் மனிதர்களைக் கொண்டு பரிசோதனை செய்ய உள்ளது.

சீனாவில் உயிர்க் கொல்லி தொற்றான கொரோனா வைரஸ் தாக்குதல் நாடெங்கும் பரவி உள்ளது.  இந்த தொற்றால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்ப்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   சுமார் 400 பேர் வரை மரணம் அடைந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த வைரஸ் தொற்று வேறு சில நாடுகளிலும் பரவியதால் உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

இந்த கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிக்கப் பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.  இதில் கிலெட் என்னும் மருந்து நிறுவனம் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கும் ஒரு புதிய மருந்தைக் கண்டு பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.   பங்குச் சந்தை உலகில் முதலாம் இடத்தில் இருக்கும் இந்த நிறுவனம் இம்மருந்தை ஏற்கனவே விலங்குகளிடம் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.

இந்த மருந்தை அமெரிக்காவை சேர்ந்த 35 வயது நபரிடம் ஏற்கனவே சோதித்துள்ளதாக கூறப்படுகிறது.  அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலால் நியுமோனியா இருந்ததாகவும் தற்போது குணமடைந்துள்ளதாகவும்  தெரிய வந்துள்ளது.   இனி இந்த மருந்து சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த பரிசோதனையை மருந்து தயாரிப்பு நிறுவனமமான கிலெட் நிறுவனம் சீன அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து  மனிதர்களிடம் சோதனை நடத்த உள்ளது.   இந்த சோதனை தற்போதுள்ள நிலையில் மிகவும் அவசரமாக நடத்தப்பட உள்ளது.  சீன நாட்டின் மருந்துகள் சட்டம் தற்போது இந்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளது.