இஸ்லாமாபாத்: ஆஸாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கானுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.

‘இம்ரான்கானே திரும்பிப் போ’ என்று நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பு கோஷமிட்டதால், பாகிஸ்தான் பிரதமருக்கு அவமானகரமான ஒரு சூழல் ஏற்பட்டது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான ஆஸாத் காஷ்மீருக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர், அந்த மக்களின் மத்தியில் உரையாற்றினார். இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு, ஆஸாத் காஷ்மீர் மக்கள் துணைநிற்க வேண்டுமெனவும், ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசு பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பேசினார் இம்ரான்கான்.

மேலும், காஷ்மீர் விஷயத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை எதிர்த்து பாகிஸ்தான் உலக அரங்கில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்ட இம்ரான்கான், அம்மக்களிடையே ஆதரவு திரட்ட முற்பட்டார்.

ஆனால், அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. அங்கு கூடியிருந்தோரில் நூற்றுக்கணக்கானோர் ‘இம்ரான்கானே திரும்பிப் போ’ என்ற கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர். இதனால், இம்ரான்கானுக்கு அவமானகரமான சூழல் ஏற்பட்டது. இதனிடையே அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு ராணுவம் பல மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டு வருதாகவும், அங்குள்ள நீர்வளத்தை அபகரித்து வருவதாகவும் தொடர்ச்சியான புகார்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.