உயிர் பயம்!: குஜராத்தை விட்டு கூட்டம் வெளியேறும் நூற்றக்கணக்கான பீகார், உ.பி. மக்கள்!

குஜராத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வாழும் வெளிமாநில தொழிலாளர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.  இதனால் அங்கு வாழ பயப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது மாநிலத்திற்கு திரும்பச் செல்கின்றனர்.

குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி பதினான்கு வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.  இந்த சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுமி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே குஜராத்தில் தங்கி வேலை பார்த்துவரும் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் வெளிமாநில நபர் என்பதால் அதனை முன்வைத்தே அங்கு வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் பலரை கும்பல்கள் தாக்கி வருகின்றன.

மக்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ், மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கேட்டுக்கொண்ட நிலையிலும் பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றன.  இதனால் குஜராத்தில் தொடர்ந்து வாழ்வதற்கே அச்சப்பட்டு  வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் கடந்த சில தினங்களில் குஜராத்தை விட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கட்டிட கட்டுமான ஒப்பந்ததாரனான கிருஷ்ணசந்ரா ஷர்மா என்பவர், “கடந்த 22 ஆண்டுகளாக அகமதாபாத்தில் வசித்து வருகிறேன். இப்போது போல இதற்கு முன் நடந்ததே இல்லை.  வெளி மாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் அலையலையாக தங்கள் மாநிலத்துக்கு மக்கள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். நானும் என் சொந்த ஊருக்குச் செல்கிறேன்” என்றார்.

இதற்கிடையே மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா இதுகுறித்து கூறும்போது,   இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு இல்லாததால்  அவர்கள் மத்தியில் அதிக கோபம் நிலவுகிறது. 14 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட காரணத்தினால் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்திருக்கிறது.  ஒருநபர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த வெளிமாநில தொழிலாளர்களும் தவறானவர்கள் என கூற முடியாது. இருந்தாலும் அந்த நபரின் குற்றத்தை ஏற்றுக்கொள்ள இயலாது.  மாநில அரசு மக்களை பாதுகாக்கவும், ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.