லாவோஸில் அணை உடைந்து விபத்து….நூற்றுக்கணக்கானோர் மாயம்

வியன்டியன்:

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான லாவோஸில் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி அதிகளவில் நடக்கிறது. இந்த மின்சாரம் தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் லாவோஸ் தென்கிழக்கு பகுதி அட்டபே மாகாணம் சனாமக்சை மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நீர் மின் திட்ட அணைக்கட்டு இன்று திடீரென உடைந்தது. இதனால் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 500 கோடி கன மீட்டர் தண்ணீர் வேகமாக வெளியேறியது. இதில் அருகில் வசித்த மக்கள் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் குறித்த முழு விபரம் உடனடியாக தெரியவில்லை. நூற்றுக் கணக்கானோரை காணவில்லை. அதனால் அவர்கள் அனைவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பல வீடுகளும் தரை மட்டமாகியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.