15வது நாள்: மருத்துவமனையிலும் ஹர்திக் பட்டேல் தொடர்ந்து உண்ணாவிரதம்
அகமதாபாத்:
இடஒதுக்கீடு கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் படிதார் அனாமத் அந்தோலன் சமீதி தலைவர் ஹர்திக் பட்டேல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
குஜாரத்தில் உள்ள படேல் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க கோரியும், அவர்கள் பெற்றுள்ள வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் கடந்த மாதம் (ஆகஸ்டு) 25-ம் தேதிமுதல் படிதார் அனாமத் அந்தோலன் சமீதி தலைவர் ஹர்திக் பட்டேர் இருந்து வருகிறார்.

கடந்த 14 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த ஹர்திக் பட்டேல் உடல்நிலை மோசமானது. அவர், தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தியதால் அவரது உடலின் எடை சுமார் 20 கிலோ எடை வரை குறைந்து மோசமான நிலையை அடைந்தது.
உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் படேல் கோரிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் பட்டேல் தனது உண்ணாவிரதம் குறித்து டிவிட் செய்துள்ளார்.
அதில், என் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்னமும் தொடர்கிறது மற்றும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடரும். குளுக்கோஸை எடுத்து வருகிறேன். அதைத் தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீரையும் எடுத்துக்கொள்வேன். நான் போராடுவேன் ஆனால் கீழே விழுந்துவிடுவேன் என் எண்ண வேண்டாம் என்று பதிவிட்டுஉள்ளார்.
குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஹர்திக் பட்டேலின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 24 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். பட்டேலின் கோரிக்கைக்கு குஜராத் அரசு செவி சாய்க்க வேண்டுமென திமுக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற முக்கிய எதிர்க்கட்சிள் வலியுறுத்தி உள்ளன.
ஹர்திக் படேலின் போராட்டத்தை காங்கிரஸ் பின்னிருந்து இயக்குவதாக பாஜ குற்றம் சாட்டி உள்ளது.