வேலூர்:

சிறைக்குள் 13 வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும்  முருகனின் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் ஒருவர் முருகன். ஜீவசமாதி அடைய தனக்கு அனுமதி வேண்டும் எனக் கேட்டு தமிழக முதல்வர், சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு இவர் மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் தனது கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18ம் தேதி முதல் உணவு உண்ணா மலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வருகிறார் முருகன்.

இந்நிலையில் முருகனை சந்திக்க வந்த அவரது உறவினர் தேன்மொழிக்கு அனுமதி மறுத்தது சிறை நிர்வாகம்.  இதையடுத்து முருகனை சந்திக்க அனுமதி அளிக்க கோரி தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முருகனை சந்திக்க மனுதாரரை ஏன் அனுமதிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், “முருகன் பேசும் நிலையில் இல்லாததால் அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை” என்றார்.

இதையடுத்து, முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே சிறையில், 13 வது நாளாக உணவு உண்ணாமல் இருக்கும் முருகனின் உடல்நிலையை பரிசோதனை செய்த சிறை மருத்துவர்கள், முருகனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால்  அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.