சென்னை

ரு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தற்கொலை முயற்சி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழரான சந்திரகுமார் வசித்து வந்தார்.  இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை தனது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.  அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பூந்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த  2016 ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.   தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்திரகுமார் வழக்கு தொடர்ந்தார்.   இவ்வழக்கு நீதிபதி என் ஆனந்த வெங்கடேஷ் கீழ் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “ஒருவர் தனது கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி கிடையாது.  அது மட்டுமின்றி தற்கொலை முயற்சிக்கான அதிகபட்ச தண்டனை ஓராண்டுக் காலம் மட்டுமே ஆகும்.. அவ்வாறு இருக்கும் போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ளது.

ஆயினும் இதுவரை கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.  இவ்வாறு வழக்கை காலதாமதம் செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை’’ எனக் கூறி சந்திரகுமார் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.