டிசம்பர் 26ல் பட்டினிப் போராட்டம்: குடியுரிமைச் சட்டத்திற்கெதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு!

சென்னை:

குடியுரிமை சட்டம் எதிர்த்து டிசம்பர் 26ந்தேதி பட்டினிப் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் இயக்கம் அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்தில் கல்வியாளர்கள், திரையுலகினர் உள்பட பல தரப்பினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறயிது. இதையடுத்து, நாடு முழுவதும் மாணவர்கள் கொதித்தெழுந்து உள்ளனர்.

தமிழகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன.  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் 23ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் களச் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து வரும் டிசம்பர் 26ம் தேதி அன்று காலை 10 மணி முதல் மலை 6 மணி வரை சென்னை அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது.