பாம்பு மூலம் மனைவி கொலை… விசாரணையில் சிக்கிய கணவன்…

கேரள மாநிலம் அடூர் அருகே உள்ள பாரக்கோடு என்ற ஊரை சேர்ந்த சூரஜ், கொல்லம் பக்கம் ஆஞ்சால் கிராமத்தைச் சேர்ந்த உத்ரா என்ற பெண்ணை  திருமணம் செய்துள்ளார்.

உத்ரா மனநிலை சரி இல்லாதவர் எனத் தெரிகிறது.

இதனால் அவரைக் கொன்று விட்டு, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான் சூரஜ்.

மனைவி சாக வேண்டும். தன் மீது பழி விழக்கூடாது என்று யோசித்த சூரஜ், விஷப்பாம்பை கொத்த விட்டு மனைவியின் கதையை முடிக்க திட்டமிட்டான்.

கடந்த மார்ச் மாதம் பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி தன் வீட்டுக்குக் கொண்டு வந்த சூரஜ், மனைவியைக் கொத்தச் செய்தான்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட உத்ரா உயிர் பிழைத்தார்.

குணம் அடைந்து ஆஞ்சல் கிராமத்தில் உள்ள தன் தாயார் வீட்டில்  தங்கி இருந்தார்.

மனைவி உத்ராவை கொல்ல மீண்டும் பாம்பை ’’ஆயுதமாக’’ எடுத்தான், சூரஜ்.

கடந்த 6 ஆம் தேதி இன்னொரு விஷப்பாம்பை வாங்கி வந்து, மாமனார் வீட்டில், மனைவியோடு தங்கினான்.

 மறுநாள் அதிகாலை 1 மணி வாக்கில், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாம்பை மனைவியின் கால் அருகே அவிழ்த்து விட்டு, கொத்தச் செய்தான்.

இந்த முறை மனைவி உத்ரா இறந்து போனார்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொடூர கணவன் சூரஜ் மாட்டிக்கொண்டான். அவனுக்கு பாம்பு சப்ளை செய்த பாம்பாட்டி சுரேஷும் கைது செய்யப்பட்டான்.

சூரஜ் , போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?

பாம்பு கொத்திய போது உத்ராவும், கணவனும் ஏ.சி.அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

ஜன்னல்கள் அடைக்கப்பட்டுள்ளதால், பாம்பு தானாக வெளியே இருந்து உள்ளே வர வாய்ப்பு இல்லை என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

சொல்லி வைத்த மாதிரி இரண்டு முறை பாம்பு கடிக்கும் போதும்,  மனைவியுடன் தான் சூரஜ் இருந்துள்ளான்.

இதையடுத்து விசாரிக்கும் முறையில் போலீஸ் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக்கொண்டான், சூரஜ்

– ஏழுமலை வெங்கடேசன்