நெட்டிசன்:

திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான பாஸ்கர் சக்தி அவர்களின் முகநூல் பதிவு:

மும்பையிலிருந்து சென்னை வந்திருந்த ஒரு பெண்மணி நேற்று என்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல் இது. அவர் வேலை நிமித்தம் சென்னை வந்து ஒரு உயர்தர ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அவரை அவர் துறை சார்ந்த அலுவல் நிமித்தம் சந்திக்க இரண்டு ஆண்கள் வந்திருக்கின்றனர். அவர்களை ஹோட்டல் ரிசப்ஷனில் அந்தப் பெண்ணின் அறைக்கு நீங்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று சொல்லி இருக்கின்றனர். (பகலில்தான்) காரணம் கேட்ட போது இது அரசு உத்தரவு. விடுதியில் இனி ஒரு ஆணும் பெண்ணும் தங்குவதாக இருந்தால் அவர்கள் சட்டபூர்வமாக மணம் செய்து கொண்டவர்கள் என்று நிரூபித்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று ஒரு ஆர்டர் வந்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இது மிகவும் அருவருப்பானதாக இருக்கிறது என்று அவர் வியப்புடன் சொன்னார். நிச்சயம் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அருவருப்பானதுதான். இதன் படி பார்த்தால் ஒரு தந்தையும் மகளும், அண்ணனும் தங்கையும் கூட வெளியூருக்கு சென்றால் அவசரத்துக்கு ஹோட்டல் அறையில் தங்க முடியாது என்றுதானே அர்த்தம்? இப்படி ஒரு உத்தரவு இருப்பது உண்மைதானா? பத்திரிகை நண்பர்கள் எவரேனும் இது பற்றி அறிவீர்களா?

இதே கருத்தை பின்னூட்டமாக எழுதியிருக்கிறார் Selvi Muralidharan. அவர், “ இப்படி ஒரு உத்தரவு இருக்கா இல்லையான்னு நிச்சயமா தெரியல , ஆனா நானும் என் தங்கையும் இரண்டு வருடங்களுக்கு முன் ஜெமினி அருகிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வெளி மாநிலத்திலிருந்து வந்திருந்த ஒரு கிருத்துவ பாதிரியாரை சந்திக்க சென்றோம் அவர்கள் இதே காரணம் சொல்லி மறுத்துவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Raja Sundararajan  என்பவரும், “கொடைக்கானலில் ஒரு ஹோட்டலில் என்னுடன் வந்த ஜப்பான்காரியுடன் நான் ஒரே அறையில் தங்கக்கூடாது என்றார்கள். நானும் சரி என்று தனியறை போட இருந்த நேரம் என் அண்ணன்மகன், “என்ன, சித்தப்பா!” என்று வந்தான். உள்ளூர்க்காரன் அவன். அரசியற்சார்பு உடையவன். ஒரே அறையில் தங்க ஒத்துக்கொண்டார்கள். குற்றாலத்தில், ஒரே அறை உவந்து தந்ததோடு, “ஸார் நீங்க எப்பொ வந்தாலும் நம்ம ஹோட்டலுக்கு வாங்க ஸார்” என்றார்கள். (குற்றாலத்தில் தனியாளுக்கு அறை தர மாட்டார்கள், தற்கொலை செய்துகொள்வோம் என்று.) லாட்ஜ் ஆட்களே செய்கிற சேட்டைகள் இவை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.