பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஈஸ்ட் பெங்கால் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஐதராபாத் அணி.

ஆட்டம் துவங்கிய 26வது நிமிடத்தில், ஈஸ்ட் பெங்கால் அணியின் மாகோமா முதல் கோலடித்து, தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம், முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது ஈஸ்ட் பெங்கால் அணி.

ஆனால், இரண்டாவது பாதியில் ஐதராபாத் அணியின் ஆட்டம் வேறுமாதிரி இருந்தது. அந்த அணியின் அரிடேன் சான்டனா, 56வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து தனது அணியை முன்னிலைப் பெற வைத்தார்.

இதுதவிர, 68வது நிமிடத்திலும், ஈஸ்ட் பெங்காலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஐதராபாத் அணியின் நர்சாரி ஒரு கோலடித்து, ஐதராபாத் அணியை வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

இதற்கு பதிலடி கொடுக்க போராடிய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு, அந்த அணியின் மாகோமா மேலும் ஒரு கோலடித்தார். ஆனால், அதன்பிறகு எந்த அணியாலும் கோலடிக்க முடியாத காரணத்தால், ஆட்டநேர முடிவில் ஐதராபாத் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.