திருமண சாப்பாட்டில் தங்கம்!! பிரம்மாண்டத்தின் அடுத்த கட்டம்

ஐதராபாத்:

திருமணங்களை பிரம்மாண்டமாக நடத்தும் கலாச்சாரம் தற்போது வளர்ந்து வருகிறது. தங்கத் தட்டில் சாப்பாடு போடுவார்கள். தங்க டம்ளரில் தண்ணீர் கொடுப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம். திருமணங்களில் பெண்ணின் கால் முதல் தலை வரை அலங்காரத்தில் இடம்பெற்று வந்த தங்கம் தற்போது திருமண பந்தியிலும் இடம்பிடித்துவிட்டது.

சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தின் சாப்பாட்டு பந்தியில் தங்க சாப்பாடு போட்டு அசத்தியுள்ளார் ஒரு கேட்டரிங் கான்ட்ராக்டர். தங்க சாப்பாடு என்றால் தங்க அரிசியில் சமைத்தது என்று எண்ணிவிட வேண்டாம். இது வேறு விதமாக உள்ளது. அதன் விபரம்…

ஐதராபாத்தை சேர்ந்த கேட்டரிங் கான்ட்ராக்டர் சாய் ராதா கிருஷ்ணா என்பவர் தான் இந்த புதிய தங்க சாப்பாடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். பொதுவாக தங்கம் அல்லது வெள்ளி பேப்பரில் இனிப்பு வகைகளை சுற்றிக் கொடுக்கும் வழக்கம் ஏற்கனவே அறிமுகமாகியுள்ளது. இவரது வாடிக்கையாளர் திருமண பந்தியில் ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் சுடச்சுட அரிசி சாதத்தை வாழை இலையில் போட்டு அதை தங்கத்திலான பேப்பரால் மூடிவிட்டார். திருமணத்திற்கு வந்த விருந்தாளிகள் சாப்பிடும் போது அந்த தங்கம் சூட்டில் உருகி சாப்பாட்டோடு கலந்துவிடுகிறது.

இந்த முயற்சியை அவர் மேற்கொண்டு வெற்றி கண்டுவிட்டார். இனி இதை தொடரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக இந்த தங்க இலை என்றழைக்கப்படும் தங்கத்திலான ஆன பேப்பர் கடைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வாழை இலையில் பரிமாறப்பட்ட சாப்பாட்டில் தங்கம் கிடக்கும் புகைப்படம், வீடியா சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்க்கும் பலரும் திருமணத்தின் பிரம்மாண்டத்தை நினைத்து புருவத்தை உயர்த்துகின்றனர்.