வீதியில் போனவர்களை விமானத்தில் அழைத்து வரும் விநோதம்..
ஊரடங்கினால், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகள் உலகம் அறிந்த செய்தி.
கால்நடையாகவும், சைக்கிள் மற்றும் சரக்கு வாகனங்களில் பயணித்தும் அவர்கள் சொந்த ஊர் சென்றனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு விடியல் பிறந்துள்ளது.
ஒரு சின்ன உதாரணம்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை பார்த்த ஒன்றரை லட்சம் பேர் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மே.வங்காளம் போன்ற தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி விட்டனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், ஐதராபாத்தில் பாதியில் முடிவடைந்த நிலையில் உள்ள கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டியுள்ளது.
ஆனால் வேலை செய்யத் தொழிலாளர்கள் இல்லாமல், கட்டிட ஒப்பந்ததாரர்கள், திணறி வருகின்றனர்.
குறிப்பிட்ட காலத்தில் கட்டிடங்களை முழுதாக கட்டி ஒப்படைக்காவிட்டால் , ஒப்பந்ததாரர்களுக்குக் கோடிகளில் நஷ்டம் ஏற்படும்.
இதனால் சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்களை விமானம் மற்றும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட ரயில்களில் மீண்டும் அழைத்து வரும் வேலையில் ஜரூராக இறங்கியுள்ளனர், கட்டிட ஒப்பந்ததாரர்கள்.
தொழிலாளர்களை, சில கட்டுமான நிறுவனங்கள் விமானங்களில் அழைத்து வருவதோடு,  அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாகவும் கொடுத்துள்ளன.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்பது இது தானோ?