தெலங்கானா: பாஜ எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறை அனுமதி

ஐதராபாத்:

திமிர் மற்றும் மதவாத பேச்சு காரணமாக பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு செய்ய தெலங்கானா சட்டத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பசு பாதுகாவலர்கள் இயக்கம் (விஷால் கவுரக்ஷனா கர்ஜனா) தொடங்கினார். ஐதராபாத்தில் சாகினாயாதுங்குஜ் பகுதியில் அப்போது ராஜா சிங் ஆத்திரமூட்டும் வகையில் பேசினார்.

இரு மதத்தினருக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் இவர் பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராஜா சிங் ஜாமின் பெற்றார். தற்போது கோஷமால் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ.வாக இருப்பதால் அவர் மீதான இந்த வழக்கு விசாணையை துரிதப்படுத்த மாநில அரசின் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

ராஜா சிங் இது போல் பல முறை பேசியிருப்பதால் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இங்கு சில விபரம்…

# கடந்த மே மாதம் ஐதராபாத்தில் பழைய நகரம் மினி பாகிஸ்தான் என்று பேசினார். மேலும், பல மோசமாக வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.

# நான் ஒரு தனியார் படையை அமைத்து ஆயுதப்பயிற்சி வழங்கி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

# வந்தேமாதரம் பாடாதவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது திமிர் தனமாக பேசியதற்கும் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

# அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தலை துண்டிக்கப்படும் என்று பேசியுள்ளார்.
# சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை சம்பவத்தின் போது 2002ம் ஆண்டு குஜராத்தில் நடத்தியதை போன்று மேற்கு வங்கத்திலும் இந்துக்கள் நடத்த வேண்டும் என்று பேசியிருந்தார்.

இப்படி பல முறை பேசியிருப்பதால் இவர் மீது வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறையின் அனுமதியை காவல்துறை எதிர்பார்த்து காத்திருந்தது. தற்போது தெலங்கானா சட்டத்துறை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.