151 ரன்களை எட்ட முடியாமல் கவிழ்ந்துபோன ஐதராபாத் அணி!

சென்னை: மும்பை அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், 151 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், 13 ரன்களில் தோற்றுப்போனது டேவிட் வார்னரின் ஐதராபாத் அணி.

அந்த அணியில், பேர்ஸ்டோ, அதிகபட்சமாக 43 ரன்களை அடித்தார். ஆனால், அவரைத்தவிர வேறுயாரும் அணிக்குத் தேவையான ஆட்டத்தை ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வார்னர், 34 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார். விஜய் சங்கர் 25 பந்துகளில் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, விராத் சிங்கின் பங்களிப்பு 11 ரன்கள் மட்டுமே. மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களே அடித்தனர்.

இறுதியில், 19.4 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 137 ரன்கள் மட்டுமே எடுத்து, 13 ரன்களில் தோற்றது ஐதராபாத் அணி.

மும்பை தரப்பில், டிரென்ட் பெளல்ட், ராகுல் சாஹர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஐதராபாத் அணி, இதுவரை தான் ஆடிய 3 போட்டிகளிலும் மண்ணைக் கவ்வியுள்ளது. மும்பை அணி, 2 முறை, குறைந்த ரன்களைப் பாதுகாத்து வெற்றி பெற்றுள்ளது.