துபாய்: ஐதராபாத் அணியிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி. டி-20 நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுலால் இந்தமுறையும் எதையும் செய்ய முடியவில்லை.
ஐதராபாத் நிர்ணயித்த 202 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு, தொடக்கம் முதலே தடுமாற்றம்தான்.
அந்த அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முறையே 11 மற்றும் 9 ரன்களை மட்டுமே அடித்தனர். இவர்கள் இருவருமே முந்தையப் போட்டிகளில் சதமடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஎல் தொடரில், ஒரே அணியில் 2 வீரர்கள் சதமடித்திருப்பது பஞ்சாப் அணியில் மட்டும்தான். ஆனால், அந்த அணிதான் இப்போது கடைசி இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணியில் பூரான் மட்டுமே பிரமாதமாக ஆடினார். 37 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 77 ரன்களை விளாசினார். ஆனால், பிறரிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் கிட்டவில்லை அவருக்கு.
இன்றையப் போட்டியில் பஞ்சாப் அணியில் மட்டும் 3 பேர் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்து 69 ரன்களில் பெரிய தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி.
ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கானுக்கு 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது மற்றும் தங்கராசு நடராஜனுக்கு தலா 2 விக்கெட்டுகளும் கிடைத்தன.