பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ஐதராபாத் – 10 விக்கெட்டுகளில் பெரிய வெற்றி!

ஷார்ஜா: மும்பைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில், 10 விக்கெட்டுகளில் பிரமாண்ட வெற்றியை ஈட்டியதன் மூலம், பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது டேவிட் வார்னரின் ஐதராபாத் அணி.

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இதனடிப்படையில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது.

பின்னர், சற்று எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சஹா ஆகிய இருவருமே அனைத்தையும் பார்த்துக்கொண்டனர்.

பிளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் பெரிய வெற்றியை ஈட்ட வேண்டுமென்பதை அறிந்த அவர்கள், அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்தனர் தங்களின் விக்கெட்டை இறுதிவரை இழக்காமல்.

மொத்தம் 58 பந்துகளை சந்தித்த வார்னர் 1 சிக்ஸ்ர் & 10 பவுண்டரிகளுடன் 85 ரன்களை விளாசினார். அவருக்கு துணைநின்ற சஹா, 45 பந்துகளில் 1 சிக்ஸர் & 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களை அடிக்க, 17.1 ஓவர்களிலேயே 151 ரன்களை எட்டி வென்றது ஐதராபாத் அணி.