ஐதராபாத்:

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த சில வாரங்களாக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அதிகளவில் விதிமீறல் அபராதம் விதித்து வருகின்றனர்.

ஹெல்மட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் வசூல் செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த அரசியல்வாதியான அம்ஜத் உல்லா கான் என்பவர் சமூக வளை தளமான டுவிட்டர் மூலம் போலீசாரின் போக்குவரத்து விதிமீறல்களை அம்பலப்படுத்த தொடங்கினார்.

ஹெல்மட் அணியாமல் வாகனம் ஒட்டுவது, செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, டுவீலரில் 3 பேர் பயணம் போன்ற போலீசாரின் விதிமீறல்களை வீடியோ மற்றும் போட்டோக்களை டுவிட்டரில் வெளியிட்டார்.

இதில் தெலங்கானா டிஜிபி அனுராக் சர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ராமாராவ் ஆகியோரையும் டாக் செய்தார். கடந்த 2 வாரங்களாக இத்தகைய பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார்.

இவரது பதிவுகளை அவரது பின் தொடர்பாளர்களும் பகிர தொடங்கினர். மேலும் அவரவர் பகுதியில் போலீசாரின் விதிமீறல்களை பின் தொடர்பாளர்களும் பதிவிட்டனர்.

இதனால் போலீசாரின் விதிமீறல் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலானது. இதனால் வேறு வழியின்றி 4 வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்கள் 4 பேரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அம்ஜத் கான் கூறுகையில்,‘‘நாள் தோறும் போலீசார் பலருக்கு அபராதம் விதிக்கின்றனர். இது தொடர்பான விவாதங்கள் தினமும் நடந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனது பிரச்சாரத்தில் பலரும் இணைந்துள்ளனர். இதனால் எனது வாட்ஸ் அப் விவாத பகுதி நிறைந்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களில் 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பியுள்ளேன்’’ என்றார்.