டெல்லிக்கு எதிராக 219 ரன்களை விளாசிய ஐதராபாத் அணி!

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், 20 ஓவர்களில் 219 ரன்களைக் குவித்துள்ளது ஐதராபாத் அணி.

டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. ஆனால், இந்த முடிவு பெரும் தவறு என்று நிரூபிக்கும் வகையில் அதிரடியாக ஆடியது ஐதராபாத் அணி.

துவக்க வீரர்களாக இறங்கிய கேப்டன் டேவிட் வார்னரும், விருத்திமான் சஹாவும் டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். மொத்தம் 34 பந்துகளை சந்தித்த டேவிட் வார்னர், 2 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 66 ரன்களைக் குவித்தார்.

விருத்திமான் சஹாவோ, 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 12 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார். இவர் களத்தில் இருந்தவரை, ஐதராபாத் அணியின் ரன்கள், 20 ஓவர்களில் 250 வரை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் ஆட்டமிழந்ததும் ரன் விகிதம் குறையத் தொடங்கியது. மணிஷ் பாண்டே மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரால் அந்தளவிற்கு அதிரடியாக ஆடமுடியவில்லை.

31 பந்துகளை சந்தித்த மணிஷ் பாண்டே 44 ரன்களை அடிக்க, 10 பந்துகளை சந்தித்த கேன் வில்லியம்சன் அடித்ததோ வெறும் 11 ரன்கள் மட்டுமே. கூடுதல் ரன்களாக 11 கிடைக்க, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களை அடித்தது ஐதராபாத் அணி.

இன்றையப் போட்டியில், டெல்லி அணியின் ரபாடா ஓவர்கள்தான் அதிகம் கிழிக்கப்பட்டன. 4 ஓவர்கள் வீசி, ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 54 ரன்களை வழங்கினார் ரபாடா.