ஐதராபாத்: வாக்களிக்க வருமாறு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஐதராபாத் வாசிகள், தேர்தல் நாளன்று தம் வீட்டிற்குள்ளேயே சுகமாக முடங்கிக் கிடந்தனர் என்பது, பதிவான வாக்கு சதவிகித அளவில் வெளிப்பட்டுள்ளது.

தமது அடிப்படை உரிமை மற்றும் கடமையை மேற்கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டவில்லை மற்றும் அலட்சியம் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

கடுமையான வெயிலில் வெளியே வந்து வாக்களிப்பதைவிட, வீட்டிற்குள் நன்றாக சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்பதே மேலானது என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டல் – கேலிகள் பகிரப்படுகின்றன.

தெலுங்கானா மாநிலத்தின் நகர்ப்புற மக்களவைத் தொகுதிகளில் முக்கிய தொகுதிகளான செவெல்லா, ஐதராபாத், செகந்தராபாத் மற்றும் மல்கஜ்கிரி ஆகியவற்றில் முறையே 53.80%, 39.49%, 39.20% மற்றும் 42.75% என்ற அளவுகளில் பதிவான வாக்குகளே உண்மை நிலையைத் தெரிவிப்பதாக உள்ளன.

கடந்த 15 ஆண்டுகளில் பதிவான வாக்குகளைவிட இது மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஐதராபாத்தில், கடந்த 2014 தேர்தலில் 53.29% வாக்குகள் பதிவானது. ஆனால், இந்த தேர்தலிலோ வெறும் 39.49% வாக்குகளே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி