தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது! மோடிக்கு எடப்பாடி கடிதம்…

சென்னை:

மிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று பிரதமர்  மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற, சுற்றுச்சூழல் மற்றும் அந்த பகுதி மக்களின் கருத்து தேவையில்லை என்று விதியை திருத்தி உள்ளது மத்தியஅரசு. அதன்படி,  நிலப் பகுதியிலும், கடலுக்குள்ளும் எண்ணெய், இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஆய்வு செய்தல், உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவை வகைப்பாடு ‘ஏ’ என குறிப்பிடப்பட்டு, அதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கடந்த 2006-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இதில் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. கடந்த 16-ம் தேதி மத்திய அரசின் அறிவிக்கையில், கடல் மற்றும் நிலப்பரப்பில் எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி, மேம்பாடு வகைப்பாடு ‘ஏ’ திட்டங்கள் என்றும், ஆய்வு செய்வதை வகைப்பாடு ‘பி-2’ திட்டங்கள் என்றும் பிரித்துள்ளது. இதில், ‘பி-2’ திட்டங்களுக்கு மக்களின்கருத்துகளை அறியத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது

ஹைட்ரோ கார்பன் புராஜக்ட்

இதன் காரணமாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்கள், தங்களது பணியை தொடங்க ஆயத்தமாகி வருகின்றன.

தமிழகத்தில் டெல்டா மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ள நிலையில், அந்த பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மத்தியஅரசின் அறிவிப்பு, தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்தியஅரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த, மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டியது அவசியமில்லை என்ற மத்திய அரசின் உத்தரவை, திரும்ப வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழ்நாடு அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பெரும்பாலான ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழகத்தின் நெற் களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியிலேயே அமைவதாகவும், இதற்கு  விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிப்பதால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.